நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டினாலேயே சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டது

நாடு பிளவுபடுவதற்கு ஒருபோதும் அனுமதியோம்

நாடு பிளவுபடுவதற்கோ நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த பாதுகாப்புத் தரப்பினரை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கோ இடமளிக்கப்போவதில்லையென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.  

கஹவத்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.  

சிலர் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிலர் தமக்கு எதிரான வழக்குகளைத் தடுப்பதற்கும் எமது அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்தனர். எனினும் அவர்களின் சதி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் நாடு பிளவுபடப்போகிறது என்றும், பௌத்தத்துக்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படப்போகிறது என்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியினரான நாமும் உண்மையான பௌத்தர்கள். நாடு பிளவு படுவதற்கோ, நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட பாதுகாப்புத் தரப்பினரை எந்தவொரு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கோ இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த 20வருடங்களில் எந்தவொரு அரசாங்கமும் செய்ய முடியாத சேவையை எமது அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் நிறைவேற்றியுள்ளது. இதனால் கலவரமடைந்திருப்பவர்களே பல்வேறு போலிப் பிரசாரங்களின் ஊடாக குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மைய சதி நடவடிக்கையின் போது பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தவர்கள், அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் என்பவற்றை கண்ணுற்றோம். நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தமையால் சதிமுயற்சியை தோற்கடிக்க முடிந்தது.  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1994ஆம் ஆண்டும். 2002ஆம் ஆண்டும் அலரி மாளிகையை கைவிட்டுவிட்டுச் சென்றவர். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதியே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாக அலரிமாளிகையில் தங்கினார். அவர் தனது சொந்த வீட்டிலேயே வசித்து வருகிறார். இம்முறை அவரை அகற்றியமையில் சட்டபூர்வ தன்மை இல்லையென்பதாலேயே நாம் அலரிமாளிகையை விட்டு வெளி யேறாமல் இருந்தோம். சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படங்களை அகற்றியிருந்தனர். புகைப்படங்களால் அழிக்க முடியாத நபரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

(நமது நிருபர்)

Tue, 01/15/2019 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை