அபகீர்த்திப் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

இந்த ஆண்டு நடுப்பகுதியில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை

சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்துவதற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமை போன்ற காரணங்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 'அபகீர்த்திப் பட்டியலில்' (Black List) உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையை இந்த வருடம் நடுப்பகுதியில் அதிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பறிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியை விநியோகித்தல் ஆகியவற்றுக்கு எதிராக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் அது தொடர்பிலான சட்டம் மற்றும் நியதிகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கையை அபகீர்த்திப் பட்டியலிலிருந்து விலக்கிக்கொள்ள முடியுமென்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிதி தொடர்பான செயலணியினால் எமது நாடு அபகீர்த்திப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் அவர்களோடு இணைந்து செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு இலங்கை தவறியதாலேயே அந்நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்த்து எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிணைமுறி மற்றும் செலாவணி ஆணைக்குழு, காப்புறுதி முகவர் ஆணைக்குழு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு இணைந்துகொண்டுள்ளது. இதற்கிணங்க திருட்டு வர்த்தக, கறுப்பு பண விநியோகம் இடம்பெறும் சூழ்நிலைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக நிதி புலனாய்வு சேவையை மேம்படுத்துதல் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு சாதகமான கொள்கை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இது தொடர்பில் நடைமுறையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தேசிய மட்டத்தில் நடைமுறையிலுள்ள கொள்கையை பலப்படுத்துதல், அவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்துதல் போன்றவை இலங்கை மீதான அபகீர்த்தியை மீள சரிசெய்வதற்கு உறுதுணையாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

(தயாசிறி முனசிங்க)

Mon, 01/07/2019 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை