'அவர்கள் என்னை தேடி வந்தார்கள்'

பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

ஜனவரி 11, 2009 இல் 'சண்டே லீடர்' பத்திரிகையில் அவர் எழுதியிருந்த ஆசிரிய தலையங்கம் இங்கே தரப்படுகிறது.

‘அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்’ என்ற தலைப்பில் லசந்த விக்கிரமதுங்க எழுதியிருந்த இறுதி தலையங்கம் இதுவாகும்.

தனது மரணத்தை முன்கூட்டியே அவர் கணித்திருந்தது அவரது இந்த தலையங்க கட்டுரையில் புரிகிறது. மரணத்தைப் பற்றி அஞ்சாமல், ஆனால் அது வருகிறது என்று தெரிந்தும் கூட தைரியமாக எழுதிய ஒரு ஊடகவியலாளனின் உள்ளக் குமுறல் இது.

அத்துடன் தனது மரணத்தை தானே எழுத்தில் வடித்த, தானே தனது இரங்கல் தலையங்கத்தை எழுதிய படைப்பாகவும் இது அமைகிறது.

லசந்த எழுதிய ஆசிரிய தலையங்கம் இதுதான்.

இராணுவத்தினரைத் தவிர வேறு தொழில் துறைகளில் உள்ள எவரும் தமது தொழிலுக்காக உயிர்களை கொடுக்குமாறு கேட்கப்படுவதில்லை. ஆனால் இலங்கையில் இப்போது ஊடகவியலாளர்களுக்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டு, குண்டு வீசப்பட்டு, சீல் வைக்கப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு இம்சைகளுக்கு ஆளாகியுள்ளன. அதேநேரம் பல ஊடகவியலாளர்கள் இம்சிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அந்த அனைத்து வழிமுறைகளிலும் துன்புறுத்தப்பட்ட நான் இப்போது அக்கடைசி தருணத்தில் நிற்பதை என்னால் உணர முடிகிறது.

'சண்டே லீடர்' ஒரு சர்ச்சைக்குரிய பத்திரிகையாக மாறியுள்ளது. ஏனெனில் நாம் பார்ப்பதையும் பற்றிப் பேசுகிறோம். நாம் பார்ப்பது ஒரு மண்வெட்டியாக அல்லது திருடனாக அல்லது கொலைகாரனாக எப்படியிருப்பினும் அதனை அதே பெயரிலேயே நாம் குறிப்பிடுகிறோம். நாம் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகள் வெறுமனே வார்த்தை ஜாலங்கள் அல்ல. அதற்கான சான்றுகளையும் நாம் பகிர்கிறோம். இதனை நமக்கு வழங்கும் பொதுமக்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

சுதந்திர ஊடகம் ஒரு கண்ணாடியைப் போன்றது. அதில் மக்கள் முகம் பார்க்கலாம். எங்கள் மூலம் நீங்கள் உங்கள் நாட்டின் நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கும். எங்களுக்கும் அது உண்டு. அதை மறைக்க நாம் விரும்பவில்லை. இலங்கை ஒரு வெளிப்படையான, உலகியல் சார்ந்த, முற்போக்கான கொள்கையுடன் கூடிய ஜனநாயகமாக இருப்பதையே நாம் பார்க்க விரும்புகிறோம்.

பலருக்கு பிடிக்காததைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். உதாரணத்துக்கு பிரிவினை பயங்கரவாதம் இல்லாதொழிக்கபட வேண்டும் என்று கூறும் அதேநேரம், அவ்வாறான பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை ஆராய்ந்து அதற்குத் தீர்வு காண்பதே முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்.

எதிர்க் கட்சியினரை விட நாம் அரசாங்கத்தைத்தான் அதிக அளவில் விமர்சிக்கிறோம். அது ஏன்? அது கிரிக்கெட் விளையாட்டைப் போன்றது. களத்தடுப்பாளர்களுக்கு நாம் பந்து வீச முடியும். துடுப்பெடுத்தாடுபவர்களுக்குத்தானே பந்து வீச முடியும். அதுபோல்தான் நாங்களும் எதையும் சொல்ல முடிந்தவர்களை விமர்சிப்பதால் எதுவும் நடக்கும்.

மஹிந்த... உங்கள் மகன்மார் உங்களது மிகப் பெரிய சந்தோஷம் என்று என்னிடம் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இனிமேல் எனது பிள்ளைகளுக்கு ஒரு தந்தை இருக்காமல் போகலாம். எனது மரணத்தையடுத்து நீங்கள் எப்போதும் போல் பெரும் குரலெழுப்பி உடனடி விசாரணை நடத்துமாறு பொலிஸாரிடம் கூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவ்வாறான விசாரணை எதுவுமே நடக்கப் போவதில்லை.

உங்களது இளமைக் காலத்தில் இந்த நாட்டைப் பற்றி உங்களுக்கு இருந்த அத்தனை கனவுகளையும் மூன்றே வருடங்களில் தவிடுபொடியாக்கி விட்டீர்கள். உங்களுக்கு இருந்த தேசாபிமானத்தின் பெயரால் மனித உரிமைகளை தூக்கிப் போட்டு மிதித்துள்ளீர்கள். உங்கள் நடத்தை எவ்வாறு இருந்ததென்றால் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த கடைக்குள் நுழைந்த சிறுபிள்ளை போல் இருந்தது. எங்களைப் பொறுத்தவரை தலைநிமிர்ந்து நடந்து எவருக்கும் தலைகுனியாதவன் என்ற திருப்தி எனக்கு உண்டு. நான் மட்டுமல்ல, ஏராளமான ஊடகவியலாளர்கள் இவ்வாறு இருந்தனர். ஆனால் அவர்கள் இப்போது மரணமடைந்துள்ளனர் அல்லது விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அல்லது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எனது மரணம் உங்கள் பார்வையின் கீழ் என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. ஷிரந்தி பாவமன்னிப்பு கேட்கும் போது அவரது பாவங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பம் மற்றும் உங்களை நினைவில் வைத்திருப்போரின் பாவங்களுக்கும் அவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்.

என்றாவது ஒரு நாள் நான் செலுத்த வேண்டிய விலையை செலுத்தும் நேரம் இப்போது வந்து விட்டது என்பதை நானும் எனது குடும்பத்தினரும் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். நான் எனது கொலையாளியைப் போல் கோழை அல்ல என்பதை எனது கொலையாளிக்கும் தெரிவிக்க வேண்டும். எனது உயிர் பறிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். அது யாரால் பறிக்கப்படும் என்றும் தெரியும். அது எப்போது என்பதுதான் கேள்வியாகி உள்ளது.

லசந்த விக்கிரமதுங்க

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை