இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்சேவர்- மொபிடெல் விருது விழா

பிரபலமான ஒப்சேவர்- மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் 2019 போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே 41வது ஒப்சேவர்- மொபிடெல்லின் மிகவும் பிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர்- 2019 போட்டி இப்போது சூடு பிடித்துள்ளதுடன் வீரர்களுக்கு வாக்களிப்பதற்கான கூப்பன்கள் சண்டே ஒப்சேவர், டெய்லி நியூஸ், தினமின, தினகரன் பத்திரிகைகளில் வெளிவருகின்றன.

2018/19 பாடசாலைகள் கிரிக்கெட் பருவகாலம் மூன்று பிரிவுகளில் இடம் பெறுகிறது. குறிப்பாக பிரிவு 1, 2, மற்றும் 3 முதலாவது பிரிவில் 36 பாடசாலைகள் உள்ளன. இரண்டாவது பிரிவில் 32 பாடசாலைகளும் மூன்றாவது பிரிவில் 215 பாடசாலைகளும் (நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் இரண்டு பகுதிகளாக) உள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற 40வது ஒப்சேவர் – மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியின் இறுதி நிகழ்வில் ரஞ்சன் மடுகல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இவர் முன்னர் ரோயல் கல்லூரிக்கும், என். சி. சி. மற்றும் இலங்கை அணிகளுக்கு தலைவராக இருந்தவர். தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி நடுவராக இருக்கிறார்.

அந்நிகழ்வில் அவர் பேசும் போது 4 தசாப்தங்களுக்குப் பின்னர் இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்கிறேன். 40 வருடங்களுக்கு முன்னர் நான் இந்த விருதை வென்ற போது மிகவும் இளையவனாக இருந்தேன். அப்போது எனது முடி நரைத்திருக்கவில்லை. நான் கண்ணாடி அணிந்திருக்கவில்லை. அதைவிட முக்கியமாக நான் தனியொருவனாக அப்போது இருந்தேன். அவ்வாறான பழைய ஞாபகங்கள் இப்போது எனக்குள் எழுந்துள்ளன.

40 வருடங்களுக்குப் பின்னர் இன்று நான் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் உங்கள் முன் தோன்றுகின்றேன். கிரிக்கெட் விளையாடியவன் என்றும் அதிகாரபூர்வமாக உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் அதனிலும் முக்கியமாக ஒரு தந்தையாக இன்று நான் உங்கள் முன் நிற்கின்றேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பெண்கள்.

ஒரு சிலர் தமது வயதை வெளியில் கூற மாட்டார்கள். மறைத்துவிடுவார்கள். ஆனால் நான் 1959இல் பிறந்தவன் என்பதை இங்கு பெருமையாக சொல்லிக்கொள்கிறேன். இன்னும் 10 வருடங்களில் உங்கள் நிகழ்வில் 50ஆவது நிறைவு விழாவை நடத்துவீர்கள். அந்த விழாவில் நான் சக்கரநாற்காலியில் இருந்தாவது கலந்து கொள்வேன் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்று மடுகல்ல கூறினார்.

எனது வாழ்க்கையில் கிரிக்கெட் என்ற புதுமையான விளையாட்டு பல மகிழ்ச்சிகரமான சம்பவங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சுருக்கமாக சொல்வதானால் கிரிக்கெட் எனக்கு மற்றைய எல்லாவற்றையும் விட சிறப்பான வாழ்க்கையை கொடுத்துள்ளது. ஒரு நல்ல குடிமகனாக வாழ கிரிக்கெட் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

மைதானத்தில் விளையாடும் விளையாட்டில் கிடைக்கும் சாதனைகள் சிலகாலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மனிதனாக நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே முக்கியமானதாகும். அந்த முக்கியமான குணத்தைத்தான் நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னைக் காணும் அல்லது நான் காணும் அனைவருக்கும் எப்போதுமே இதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன் என்று மடுகல்ல அங்கு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் போன்று சிறந்த பாடசாலை வீரர்களுக்கு மட்டுமன்றி திறமை காட்டும் பாடசாலை மாணவியருக்கும் இம்முறை விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பிரதான விருதுகளாக சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் மற்றும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆகியோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பிரதான விருதுகளைத் தவிர 1, 2, 3 ஆகிய பிரிவுகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த சகல துறை ஆட்டக்காரர் ஆகியோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் விருதுகள் வழங்கப்படும். அத்துடன் மேற்படி மூன்று பிரிவுகளிலும் சிறந்த அணிக்கும், சிறந்த ஒழுக்கத்தைப் பேணும் விருதுகள் கிடைக்கும்.

சிறந்த ஒழுக்கத்துக்கான அணிக்கான விருது பத்து வருடங்களுக்கு முன் மடுகல்லவினால் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1, 2, மற்றும் 3ஆம் பிரிவில் விளையாடும் அனைத்துப் பாடசாலைகளும் இந்த விருதுகளுக்காக கணக்கில் எடுக்கப்படும்.

ஒப்சேவர் – மொபிடெல் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கான வீரர்களை நடுவர்கள் சங்கத்தில் உள்ள நடுவர்கள், இலங்கை பாடசாலை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் தேசிய தேர்வாளர்களைக் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யும்.

ஒப்சேவர் – மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் என்ற இந்த போட்டியை முன்னாள் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த போட்டி அவர்களை மேலும் பல கௌரவங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிறந்த பாடசாலை வீரர்களை தெரிவு செய்யும் இப்போட்டி முதலில் 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட போது ரோயல் கல்லூரியை சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல அதனைத் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த விருதை வென்றவர்களாவர். அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம, அசங்க குருசிங்க, ரொஷான் ஜுராம்பதி, சஞ்ஜீவ ரணதுங்க, குமார் தர்மசேன, மார்வன் அத்தபத்து, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த விருதை பெற்றவர்களில் சிலராவர். அத்துடன் இப்போது இலங்கை அணியில் விளையாடும் தினேஸ் சந்திமால் 2009 இல் இந்த விருதை வென்றார். குசல் மெண்டிஸ் 2013 இல் இந்த விருதை வென்றார்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் போட்டி பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது.

இவர்களில் பலர் நாட்டுக்காக விளையாடியுள்ளனர். நாட்டின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முதன்மையாக இந்தப் போட்டிகள் இருந்துள்ளன. விருதுகளை வெற்றி கொள்வதைவிட கிரிக்கெட் உலகில் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் குழுவில் ரஞ்சன் மடுகல்ல மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அதே நேரம் நாட்டின் கிராமப்புறங்களில் கிரிக்கெட் திறமை மிளிர்ந்து கிடப்பதற்கு இப்போது கிராமப்புறங்களில் பெயர் வாங்கும் பாடசாலை வீரர்களின் பெயர்கள் சான்று பகிர்கின்றன. அந்த திறமையான வீரர்களை அங்கீகரிப்பதே சண்டே ஒப்சேவர் – மொபிடெல் போட்டியின் நோக்கமாகும்.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை