தொலைதூர உலகை இன்று நெருங்கும் நாசா விண்கலம்

நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் தொலைதூர பனிக்கட்டி உலகத்தை இன்று நெருங்கவுள்ளது.

அல்டிமா துலே என்ற 30 கிலோமீற்றர் அகலம் கொண்ட இந்த விண்பொருளை விண்கலம் கடந்து செல்வதன் மூலம் சூரிய மண்டலத்தில் மிகத் தொலைவில் இருக்கும் பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக சாதனை படைக்கும். இந்த விண்பொருள் பூமியில் இருந்து 6.5 பில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

இதன்படி ஜனவரி முதலாம் திகதி (இன்று) இரவு 11 மணி அளவில் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இந்த விண்பொருளை கடக்கவுள்ளது. அதுவரை இந்த விண்பொருள் எவ்வாறு இருக்கும், எதனால் உருவாகியுள்ளது என்ற விபரங்கள் மர்மமாகவே உள்ளன.

“அல்டிமாவின் மேற்பரப்பு அமைப்பு, அதற்கு எத்தனை நிலவு உள்ளன என்று தீர்மானிப்பது, அதற்கு வளையம் உள்ளதா அல்லது அதன் சுற்றுச்சூழல் பற்றி நியூ ஹொரைசன்ஸ் நிலப்படம் ஒன்றை அமைக்கும்” என்று நியூ ஹொரைசன்ஸின் முக்கிய ஆய்வாளர் அலன் ஸ்டேர்ன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அல்டிமாவில் இருந்து சுமார் 3,500 கிலோமீற்றர் தூரம் வரை நெருங்கவுள்ள நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் கிகாபைட் அளவு கொண்ட புகைப்படங்களை பெறவும், ஏனைய தரவுகளை சேகரிக்கவும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்காக விண்கலத்தை தயார் செய்யும் ஏற்பாடுகளையும் நாசா செய்து வருகிற. எனினும் விண்கலத்தில் இருந்து பூமிக்கு செய்தி கிடைக்க ஆறு மணி எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.

எட்டாவது கிரகமான நெம்டியுனுக்கு அப்பால் சூரியனை வலம் வரும் உறைந்த பொருட்கள் உள்ள கூப்பர் பட்டையிலேயே அல்டிமா துலே உள்ளது. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2015 ஆம் ஆண்டு நெருங்கி பயணித்த புளுட்டோ குறுங்கோளை விடவும் இது மிகத் தொலைவில் உள்ளது.

எனினும் இந்த கூப்பர் பட்டையில் அல்டிமா போன்று பல்லாயிரக்கணக்கான பொருட்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவைகள் மூலம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய தடயங்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளுட்டோ மற்றும் கூப்பர் பட்டை தொடர்பான கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கத்தை கொண்டிருந்தது.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை