பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபாரத்தை முற்றாக ஒழிக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்பு

பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.

சட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி, உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் ஏனைய நிறுவனங்களில் உதவியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும், குறித்த நிறுவனங்களின் தலைவர்களும், அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை