ஏனைய மதங்களுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாசகம் உள்ளடக்குவது அவசியம்

பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையை இல்லாமல் செய்ய எவரும் விரும்பவில்லை. எனினும், ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான வாசகத்தை உள்ளடக்குவது எவருக்கும் எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தில் மனப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்து புதிய அரசியலமைப்பை தயாரிப்பதா? அல்லது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை திருத்துவதா? என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசியலமைப்பை அவசர அவசரமாக நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக காண்பிப்பதற்கு சிலர் முயற்சித்தனர். உண்மையான நோக்கத்துக்காக நாம் அரசியலமைப்பு சபையை உருவாக்கியுள்ளோம். தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் பலவற்றில் அரசியலமைப்பு மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே நாம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

வழிநடத்தல் குழுவில் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக மாகாணசபை முதலமைச்சர்கள் முன்வைத்த கருத்துக்களை உள்ளடக்கியதாக உபகுழுவின் அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. உபகுழுவின் முன்னால் கருத்துத் தெரிவித்த பெரும்பாலான மாகாண முதலமைச்சர்கள், தமக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். எனவே மாகாணங்களுக்கிடையில் நியாயமான அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.

எனினும், பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லாமல் செய்யப்படுகிறது என சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உரையாற்றிய பிரதமர் இதனை உறுதியாக மறுத்திருந்தார். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையில் எந்தவிமான மாற்றமும் செய்யப்படமாட்டாது. அதேநேரம், ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலான வாசகத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குவது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை