அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அணிக்கு 8பேர் 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் (31) அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகமும் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகமும் தெரிவாகினர்.

நாணயச்சுழச்சியில் வெற்றி பெற்ற சோபர் விளையாட்டுக் கழகம் 5 ஓவர் நிறைவில் 4 விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பதிலுக்கு வெற்றி பெறத்துடுப்பெடுத்தாடிய சுப்பர் சொனிக் அணியினர் 5 ஓவர் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 52 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டங்களால் இச்சுற்றுப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடத்தினை தனதாக்கிக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக முபாரிஸ் தெரிவு செய்யப்பட்டு அதிதியினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனான சோபர் அணியின் தலைவரிடம் நிகழ்வின் பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வெற்றிக்கிண்ணத்தினையும் 20 ஆயிரம் ரூபாப் பணவவுச்சரினையும் வழங்கி வைத்தனர்.

இச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற சுப்பர் சொனிக் அணித்தலைவரிடம் கிண்ணத்துடன் 15 ஆயிரம் ரூபா பண வவுச்சரினையும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ்,அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத்,அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் உட்பட சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் பதவிவழி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

 ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை