தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் ஜனாதிபதி தலைமையில் நேற்று வடக்கில் ஆரம்பம்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வு வடக்கில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்துறை சார்ந்த அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நேற்று ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப் பட்டது.

நேற்றைய இந்நிகழ்வின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஒரு தொகை காணிகளும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இதையடுத்து கிளிநொச்சியில் தேசிய மர நடுகைத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மரக்கன்று ஒன்றையும் உத்தியோகபூர்வமாக நட்டு வைத்தார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வார நிகழ்வில் அமைச்சர்கள் தயா கமகே, ரிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அரச அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் கலாசார முறைப்படி மேள, தாள முழக்கத்துடன் குங்குமத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ், முஸ்லிம், சிங்கள பாடசாலை மாணவர்கள் போதை ஒழிப்பு செயற்திட்டத்துக்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் மேற்கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பெருமளவிலான பொலிசார், படையினர், அரச அதிகாரிகளும் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

“போதையிலிருந்து விடுதலையான நாடு” கருத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தினால் விசேட ஜனாதிபதி செயலணியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை இந்த செயற்திட்டம் நாட்டின் 16 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் கல்வியமைச்சின் அனுசரணையுடன் பாடசாலை மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம் வடக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

போதையிலிருந்து விடுதலையான நாடு கருத்திட்டத்திற்கு 7500 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கி பல்வேறு திட்டங்களை மாவட்ட ரீதியில் அரசாங்கம் நடைமுறைப் படுத்தி வருகின்றது. பாடசாலை மட்டத்திலிருந்தே இதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ஔடதங்கள் அபாய மருந்துகள் குற்றத்தடுப்பு திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கான இலக்கமும் நேற்று “1984” ஜனாதிபதியினால் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. (ஸ)

(முல்லைத்தீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்)

 

 

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை