மியன்மாரில் ரக்கைன் கிளர்ச்சியாளர்களுடனான மோதலால் ரொஹிங்கிய அகதிகளிடம் அச்சம்

மியன்மார் இராணுவத்திற்கும் ரக்கைன் இன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நாளாந்தம் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் எல்லையில் ஆளில்லாத நிலத்தில் வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்களிடையே அச்சம் பரவி வருகிறது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பமான இராணுவ நடவடிக்கை காரணமாக மியன்மாரில் இருந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்கள் தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பங்களாதேஷ் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும் மேலும் பலரும் பங்களாதேஷ் அகதி முகாமிற்கு செல்லாமலும் மீண்டும் மியன்மாருக்கு திரும்பாமலும் எல்லையில் தங்கியுள்ளனர்.

இவர்கள் தற்போது மியன்மார் துருப்புகள் மற்றும் அரகான் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதலின் நடுவில் சிக்கியுள்ளனர். அரகான் பெளத்த கிளர்ச்சியாளர்கள் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் அதிக சுயாட்சி கேட்டு போராடி வருகின்றனர்.

“மியன்மாருக்குள் அரகான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச துருப்புகளுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது” என்று ரொஹிங்கிய தலைவர் டில் மொஹமது ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“நிலைமை அதிக பதற்றம் கொண்டதாக உள்ளது” என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு கெடுபிடிக்கள் மற்றும் நாளாந்த துப்பாக்கிச் சூடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மோதல்களில் 13 பொலிஸார் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த வாரம் எல்லையை ஒட்டி மியன்மார் துருப்புகளால் பாதுகாப்பு முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் குறுகலான நிலத்தில் இடம்பெயர்ந்து வசிக்கும் சுமார் 4,500 முஸ்லிம்களை காணக்கூடிய வகையில் நீண்ட எல்லை வேலிக்கு அருகில் இந்த பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு வேளைகளில் எல்லைக்கு மறுபக்கம் துப்பாச் சூடு அடிக்கடி கேட்பதாக அகதிகள் சமூகத் தலைவர் நூர் அலாம் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு இரவிலும் எல்லைக் காவல் படை எமது முகாமுக்கு அருகில் 10 புதிய பாதுகாப்பு முகாம்களை அமைக்கின்றனர்” என்று அவர் ஏ.எப்.பிக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதியின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். “நாம் என்ன செய்வது என்பது குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று உள்ளுர் நிர்வாகி கமால் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.

பெளத்தர் பெரும்பான்மை கொண்ட மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் பல தாசப்தங்களாக பாகுபாட்டுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

வறுமைப்பட்ட மேற்கு ரக்கைன் மாநிலத்தில் குறிப்பாக ஆழமான இன மற்றும் மத வெறிப்புணர்வு இருந்து வருகிறது.

பங்களாதேஷுக்கு தப்பி வந்த அகதிகள் இராணுவம் மற்றும் பெளத்த குற்ற கும்பல்களின் கூட்டு படுகொலை, கற்பழிப்புகள் குறித்து விபரித்துள்ளனர்.

ரொஹிங்கிய ஆயுதக் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடும் மியன்மார், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது.

எனினும் இது குறித்து இனப்படுகொலை விசாரணை ஒன்றை நடத்த ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை