விவசாயிகளை ராஜாக்களாக்கும் வேலைத்திட்டம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா
7500 ரூபா வரை சகல மட்டங்களிலும் இலகு கடன் திட்டங்கள்

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் திட்டத்தின் மூலம் 7500 இலட்சம் ரூபா வரை பல்வேறு மட்டங்களிலும் கடன்களைப் பெற்றுக்கொடுத்து விவசாயிகளை ராஜாக்களாக்கும் வேலைத்திட்டம் எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

விவசாயிகளை அரசர்களாக்கும் வேலைத் திட்டத்தை தற்போதைய அரசாங்கமே ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா இலகு கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் விவசாய சமூகத்தினர் மட்டுமன்றி பல்வேறு துறைகளிலுள்ளோர், தொழில் முயற்சியாளர்களாக்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இலகு கடன் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தம்புள்ளையில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

தொழில் முயற்சியாளர்கள் என்பது இலங்கையர்களுக்கு புதியதொன்றல்ல. வரலாறு தொடக்கம் இலங்கையர்கள் திறமையான தொழில் முயற்சியாளர்களாக இருந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மதிப்பீடுகளில் இது தெரியவருகிறது. எகிப்து, பேர்ஸியன், இதற்கு உதாரணமாகும்.

நாம் ஆரம்பித்துள்ள விவசாய இலகு கடன் திட்டத்தின் மூலம் 7500 இலட்சம் ரூபாவரை சகல மட்டங்களிலும் கடன் பெற்றுக் கொடுக்கப்படும். சாதாரண வட்டி வீதத்திலேயே இந்தக் கடன்கள் வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு இத்தகைய கடன் எந்தவொரு வட்டியுமில்லாமல் வழங்கப்படும்.

2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் நாடு முழுவதும் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கு முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த கடன்களுக்கு மேலதிகமாக மேலும் சில கடன் திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தமக்கென வீடொன்றை நிர்மாணித்துக்கொள்வதற்காக 100 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்கு மேலதிகமாக தனியார் துறையினருக்கு சொகுசு பஸ் வண்டிகளை இறக்குமதி செய்வதற்கும் முச்சக்கர வண்டிகளை வைத்திருப்போர் கார் ஒன்றுக்கு சொந்தக்காரராவதற்கும் இலகு கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

அரசியல் நெருக்கடி காரணமாக நாம் சில பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது. மீண்டும் எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதனை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் 1925 என்ற நேரடியான தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். இந்த இலக்கம் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

இந் நிகழ்வில் அமைச்சர்களான பி. ஹரிசன், இரான் விக்கிரமரத்ன, வசந்த அலுவிஹார உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை