முறைப்பாடுகளுக்கு வடக்குஇ கிழக்கில் விசேட அலுவலகங்கள் தேவை

வடக்கு, கிழக்கில் நுண்கடன் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கு மாவட்ட செயலயங்களில் விசேட அலுவலகங்களை அமைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் நுண்கடன்களை மீளச்செலுத்த முடியாது 60 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் மக்களை நுண்கடன் நிதியங்களிடமிருந்து பாதுகாக்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடன் இணக்க (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். கடன் நெருக்கடியினால் வடக்கு- கிழக்கு மக்களே அதிகமான பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் கடன் நெருக்கடியினால் 60 பேர் வடக்கில் தற்கொலை செய்துள்ளதாகவும் கடன் நிறுவனங்கள் கடன்களை திரும்ப பெற்றுக்கொள்ள மக்களின் சொத்துக்களை சூறையாடுவதுடன் பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமையும் காணப்படுகிறது என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு முழுவதிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகான மக்கள் பாரிய கடன் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெருமளவானவர்கள் கடன்களை மீளச்செலுத்த முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

தற்கொலை செய்வது மாத்திரமன்றி, தமது சொத்துக்களை விற்பனை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

சில நுண்கடன் நிதியங்களின் பிரதிநிதிகள் பாலியல் லஞ்சம் கோரியதாகவும் முறைப்பாடுகள் உள்ளன. யுத்தம் நிகழ்ந்த காலத்தில் கடன் நிறுவனங்கள் வடக்கு கிழக்கிற்கு நுழைய முடியாதபோதும், யுத்தத்தின் பின்னர் அவர்கள் வேண்டியளவு கடன்களை வழங்கி மக்களை சிக்கல்களுக்குள் தள்ளியுள்ளனர்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அம் மக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? முதலில் இந்த நுண் கடன் நிறுவனங்களை முழுமையாக நிறுத்த வேண்டும்.

கடன்பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு கடன் இணக்க சபைகளின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அது மாத்திரமன்றி முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகங்களில் தனியான அலுவலகங்களை அமைப்பதற்கும் நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

(ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்)

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை