மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கூடுதல் மழை; தாழ் பகுதிகளில் வௌ்ளம்

மட்டு. தும்பங்கேணியில் 122 மி.மீ மழை வீழ்ச்சி

சீரற்ற காலநிலையால் ஊவா, மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மழையுடன் கடுங்காற்றும் மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுள் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்துள்ளபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தும்பங்கேணி பிரதேசத்திலேயே ஆகக்கூடியதான 122 மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 105.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பன்கேணி பகுதியில் 122.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 52.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சை பகுதியில் 41.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 20.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மற்றும் கல்முனை பகுதியில் 97.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் தைப் பொங்கலுக்கான வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முறையான வடிகாலமைப்பு வசதியின்மை காரணமாக நுளம்புகள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.அதிகமான மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளார்கள். கால்நடைகளுக்குரிய தீணிகளுக்கும் மழையினால் தட்டுப்பாடு நிவுகின்றது.

ஆறுகள்,வாவிகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

 

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை