ஆசிய கனிஷ்ட தகுதிகாண் போட்டி: மிதுன் ராஜ்இ ஜென்சனுக்கு ஆறுதல் வெற்றி

2019ஆம் ஆண்டின் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடராக எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 3ஆவது ஆசிய கனிஷ்ட (18 வயதின் கீழ்) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பத்து வீரர்களை பங்கேற்கச் செய்ய மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவனான ருமேஷ் தரங்க மாத்திரம் தட்டெறிதல் போட்டிக்கான ஆசிய கனிஷ்ட அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்து நேரடியாக தகுதிபெற்றார்.

இதுஇவ்வாறிருக்க. இம்முறை போட்டிகளில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்களின் பங்குபற்றல் மிக மிக குறைவாக இருந்தாலும், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான எஸ். மிதுன்ராஜ்,ஈட்டி எறிதல், தட்டெறிதல், சம்மட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ஆறுதல் வெற்றிகளைப் பதிவுசெய்தார்.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சார்பாக கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட எஸ். ஜன்சன் மற்றும் பி. ரதுஷpகா தத்தமது போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைப் பெற்றுக்கொண்டாலும் ஆசிய கனிஷ்ட போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்யவில்லை.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிவேக வீரராகத் தெரிவாகிய குருநாகல் அல்- இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட்டுக்கு 100 மீற்றர் தெரிவுப் போட்டியில் நான்காவது இடத்தை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

3ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை முன்னிட்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இத் தகுதிகாண் போட்டிகளுக்கு நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 200 இற்கும் அதிகமாக வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த 16 வயதான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 51.90 மீற்றர் தூரத்தைப் பதிவு முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டமாக குறிப்பிடப்பட்ட 51 மீற்றரை தாண்டிய அவர், நேரடியாக குறித்த போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்குகொண்ட அவர், 63.48 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் அடைவுமட்டத்தை நெருங்கியிருந்தார்.

இவ்விரண்டு போட்டிகளிலும் ருமேஷ் தரங்கவுக்கு பாடசாலை மட்டப் போட்டிகளில் பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜுக்கு தட்டெறிதலில் (43.40 மீற்றர்) இரண்டாவது இடத்தையும்,ஈட்டி எறிதலில் (55.39 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அத்துடன், ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.63 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மிதுன்ராஜ், ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் 38.85 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார். எனினும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தினை நெருங்கத் தவறிவிட்டார்

கோலூன்றிப் பாய்தலில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சார்பாக இரண்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட எஸ். ஜன்சன் 3.70 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த ஜன்சன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட மகாஜனா கல்லூரி மாணவியான பி. ரதுஷிகா, 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனினும் இவ்விரண்டு வீரர்களுக்கும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

இந்த நிலையில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட், தகுதிகாண் போட்டியை 11.35 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட ரஸ்னிக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதுஇவ்வாறிருக்க, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான உத்தேச அடைவுமட்டத்தினை இம்முறை தகுதிகாண் போட்டிகளில் நெருங்கியிருந்த 10 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதில் ஆண்களுக்கான 100,200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குகொண்ட சிலபாம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஷமால் மிலிந்த பெரேரா (10.80 செக்., 22.22 செக்.), ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மத்துகம ஆனந்த ஷாஸ்ட்ராலயவைச் சேர்ந்த இசுரு கௌஷல்ய அபேவர்தன (48.77 செக்.), பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குகொண்ட இராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சதீபா ஹெண்டர்சன் (12.29 செக், 25.07 செக்.), பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நாவல ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்க (57.84 செக்.), பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கம்பஹா ஹொலிகுரொஸ் கல்லூரியைச் சேர்ந்த சானிக்கா லக்ஷானி ( 2 நிமி. 16.64 செக்.), பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட கண்டி விகரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பி. ஹெட்டியாரச்சி (ஒரு நிமி. 02.45 செக்.), ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஹிரூஷ ஹசேன் (7.11 மீற்றர்), ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட இப்பாகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த பிபின் அபேவர்தன (1.68 மீற்றர்), பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கலிகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.ஐ பஸ்நாயக்க (10 நிமி. 42.27 செக்.), ஆகியோர் தத்தமது போட்டிகளில் சிறந்த பெறுமதிகளைப் பதிவுசெய்து ஆசிய கனிஷ்ட மௌய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினை நெருங்கியிருந்தனர்.

(பீ.எப் மொஹமட்)

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை