ஐ.ம.சு.முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுப்பது ஜனநாயகத்துக்கு முரண்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதால் எதிர்க்கட்சியில் பெரும்பான்மையாகவுள்ள ஐ.ம.சு.முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட உரிமைகளை மறுப்பது ஜனநாயகத்துக்கு முரணானதாக அமையுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதைத் தடுப்பதாயின் புதிய அரசியலமைப்பில் அது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் அதிருப்தியை

வெளியிட்டார். இதற்குப் பதிலளிக்கும்போதே சபாநாயகர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நான் ஏற்கனவே எனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டேன். ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களிலும் உள்ளன. அது மாத்திரமன்றி எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

அது மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும், அவர் தொடர்ந்தும் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் ஐ.ம.சு.முவின் செயலாளர் நாயகம் எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

அதேநேரம், அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதற்கான உரிமை உள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகியுள்ளது. இருந்தபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்கள். ஒருசிலரின் தனிப்பட்ட தீர்மானித்தினால் எதிர்க்கட்சியின் அதிக ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட உரிமைகளை மறுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாக அமையும்.

ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியாக இருந்த சந்தர்ப்பங்கள் கடந்த காலத்திலும் உள்ளன. இந்த நிலைமையை மாற்றுவதாயின் புதிதாக தயாரிக்கும் அரசியலமைப்பில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை