பொறுப்புகளை நிறைவேற்றத் தவறும் அரச ஊழியர்கள் தண்டிக்கப்படுவர்

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இப் பகுதியில் கடமையாற்றும் அரசு ஊழியர்கள் குறித்து தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அரச ஊழியர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.இந்நிலைமை தவறும் பட்சத்தில் நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கிணங்க அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இராணுவத்தினரை எமது அரசாங்கம் நீதிமன்றங்களில் விசாரணைக்காக நிறுத்தப்போவதாக பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். நாட்டை மீட்பதற்காக போராடி வெற்றிகளைப் பெற்றுத் தந்த இராணுவத்தினரை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.ஒரு சிலர் அரசாங்கத்துக்கு சேறு பூசுவதற்காக இவ்வாறான பொய்யான விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 

பெளத்த பிக்குமார் உயர்ந்த அந்தஸ்துடன் மதிக்கப்பட வேண்டியவர்கள். எனவே காவியுடை தரித்த அவர்கள் சமூகத்தில் உயர் கெளரவத்துடன் பணிகளை செய்ய வேண்டும். 

இந்த நாட்டின் சில குறுகிய மனப்பான்மையுடைய அரசியல் வாதிகள் நீதிமன்றங்களை அவமதித்து வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றங்களை  

அவமதித்து வருகிறார். மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளரால் தொடரப்பட்ட வழக்கொன்றில் அவர் குற்றவாளியாக காணப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை நஷ்ட ஈடாக அவருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்குகிறது. நீதிமன்றங்கள் சரியான தீர்ப்புகளை வழங்கும் போது தவறு செய்கின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். தண்டிக்கப்பட்டவர்கள் சுயநலத்துக்காக  

நீதிமன்றங்களை அவமதிக்கின்றனர்.தாம் குற்றத்தை செய்து விட்டு குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கும் போது அவற்றை விமர்சனம் செய்கிறார்கள் இந் நிலைமை மாறவேண்டும் என்றார்.     

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Thu, 01/17/2019 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை