நாமல், விமல், ஷசியிடம் சி.ஐ.டி வாக்குமூலம்

நமது நிருபர்

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை படுகொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவருடைய மனைவி ஷசி வீரவன்ச ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய எதிர்பார்த்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட்டிடம் அறிவித்தனர்.

இதுவரை நடத்திய விசாரணைகளுக்கமைய ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜையை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல்வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச ஆகியோர் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம், படுகொலை சதித்திட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக.டி.சில்வா மற்றும் இந்தியப் பிரஜையான மேர்சிலி தோமஸ் ஆகியோரின் விளக்கமறியல் காலம் ஜனவரி 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க.டி.சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரன, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமாரவை கைதுசெய்வதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்துகொள்ள நாமல் குமார போலியான உயர்தர மற்றும் சாதாரணதர சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சதித்திட்டம் தொடர்பில் அறிக்கைளை விடுப்பதற்கோ அல்லது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ இடைக்காலத் தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டினர்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, அரசாங்க இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு அவருடைய குரல் மாதிரி பெறப்பட்டதாகவும், நாமல் குமாரவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலுடன் இந்தக் குரல் மாதிரி பரிசீலித்துப் பார்க்கப்படவிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தனது கட்சிக்காரரான நாலக்க.டி.சில்வாவுக்கு மருத்துவ ரீதியான பிரச்சினைகள் இருப்பதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரி மருத்துவ அறிக்கையொன்றை சட்டத்தரணி அஜித் பத்திரன கையளித்தார்.

எனினும், நாலக்க டி சில்வாவை தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைத்திருக்க போதிய படுக்கைகள் இல்லையென வைத்தியசாலை அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாலக்க டி சில்வாவுக்கு போதிய சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டனவா? என நீதிபதி, சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து அறிக்கையொன்றையும் கோரினார். இந்த வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை