சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது

மனிதனின் மரணத்திற்கும் உடல், உள நோய்களுக்கும் பெரிதும் காரணமாக அமையும் தொழிநுட்ப கொங்கிரீட் கட்டிடங்களையே இன்று அபிவிருத்தியாக பார்க்கப்பட்டபோதும்,  இயற்கையின் பேண்தகு இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய அபிவிருத்தி செயன்முறையே முழு உலகினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் உலக அரச தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்களுக்கு பெரும்பாலும் சுற்றாடலை பாதுகாக்கும் தேவை இருக்கவில்லை என்றபோதும், இன்று சுற்றாடலை பாதுகாப்பது குறித்து உலகெங்கிலும் அனைவரும் முக்கியமான உரையாடல்களில் ஈடுபட்டிருப்பது சுற்றாடல் அழிவு மனித இருப்பின் முன் உள்ள தீர்க்கமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கின்ற காரணத்தினாலேயே ஆகுமென்றும், சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய இன்றுள்ள பொறுப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

நேற்று (30) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை கல்வியினூடாக சுற்றாடல் பற்றிய அறிவை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை நடைமுறை ரீதியாக சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, சுற்றாடல் மீது பற்றுகொண்ட எதிர்கால தலைமுறையினரை கட்டியெழுப்புவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

சுற்றாடல்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டுக்கு முன்வைத்துள்ள “நீலப் பசுமை யுகம்” எதிர்கால இலங்கையை கட்டியெழுப்பும் விரிவான செயற்திட்டத்தில் சுற்றாடல் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்காக முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வருட திட்டம் ஒன்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம், நான்கு மில்லியன் பாடசாலை மாணவர்களை சுற்றாடலை நேசிக்கும் பிள்ளைகளாக மாற்றுவதை இலக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்ட சுற்றாடல் வழிகாட்டி ஒருவருக்கு பல்கலைக்கழக நுழைவின்போது பாடவிதானத்துடன் இணைந்த வெளிக்களச் செயற்பாட்டிற்காக 04 புள்ளிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

எட்டாவது முறையாக இடம்பெறும் சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் 40 பாடசாலைகளை சேர்ந்த 93 சுற்றாடல் வழிகாட்டிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சுற்றாடல் பற்றிய அறிவை புத்தகங்களுடன் மட்டுப்படுத்தாது அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு பிள்ளைகளை பயிற்றுவிக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் இந்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் செயற்திறனாக நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மகாவலி சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் ஏ.ஜே.எம்.முசம்மில், பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Thu, 01/31/2019 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை