அரச நிறுவன தலைவர் நியமனத்தில் சுற்றுநிருபத்தை பேணவும்

Rizwan Segu Mohideen

ஜனாதிபதி மைத்திரி, அமைச்சு செயலர்களுக்கு பணிப்பு

அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும்போது, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்படும் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அறிவித்துள்ளார்.

அமைச்சர்களின் செயலாளர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், சபைகள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களினதும் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், நியமனத்தின்போது ஜனாதி செயலாளரினால் விடுக்கப்படும்  சுற்றுநிருபத்திற்கு அமைவாக செயற்படுவது கட்டாயம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கும் போது அதற்கான தகுதிகளை பரிசீலனை செய்து பரிந்துரைகளை மேற்கொள்வது தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் தகுதிகளை பரீட்சித்து பரிந்துரைகளை வழங்குவதற்கு குறித்த குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு, அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

Fri, 01/04/2019 - 13:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை