ஞானசாரதேரரின் விடுதலை; இப்போது எதுவும் கூற முடியாது

சுதந்திர தினத்தில் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அரசியலமைப்புக்கு இணங்க ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் கலபொட அத்தே ஞானசார தேரர் இம்முறை விடுதலை செய்யப்படுவாரா? என்பது தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது என உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையி லேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் தமது கேள்வியின்போது இம்முறை சுதந்திர தினத்தின் போது ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் பல தரப்பினரதும் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் அவர் விடுதலை செய்யப் படுவாரா? என அவர் கேள்வியெழுப்பினார்.  

இதற்குப் பதிலளித்த அமைச்சர், கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம்  ஜனாதிபதிக்கே உள்ளது. எனினும் அதற்கான முடிவை அவர் தன்னிச்சையாக மேற்கொள்ளமாட்டார். சிறைக்கைதிகளின் தண்டனைக் காலத்தில் அவர்களின் நன்னடத்தை செயற்பாடுகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையைப் பெற்றுக்கொண்டே விடுதலை தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொள்வார்.  

சட்டமா அதிபரினூடாக சிறைச்சாலை ஆணையாளரின் ஏற்பாட்டில் நீதியமைச்சினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய பரிசீலிப்பிற்கு பின்பே கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.  

நாட்டில் புதுவருடம், பொஸன், சுதந்திரதினம் போன்ற விசேட நாட்களில் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அதற்கிணங்க இம்முறை சுதந்திர தினத்திலும் கைதிகள் விடுதலை இடம்பெறும். ஞானசார தேரரின் விடுதலை தொடர்பிலும் மேற்குறித்த விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கிணங்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)    

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Thu, 01/24/2019 - 11:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை