அராத்து ஆனந்தியா அதகளம் பண்ணிய ஆட்டோ டிரைவர், டாக்டரா ?

தமிழ் சினிமாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் இடம்பெறுவது அபூர்வம். எப்போதாவது குறிஞ்சி மலர் போல் ஒருவர் வருவார். அப்படியே ரசிகர் வட்டாரத்தை உலுக்கியெடுத்துவிட்டு செல்வார். கோயமுத்தூரைச் சேர்ந்த பெண் சாய் பல்லவி செந்தாமரை கண்ணன்.

நடிகை, டான்சர், பாடகி, மருத்துவர் என பன்முகம் கொண்ட சாய் பல்லவி, மலையாளத்தில் பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தைக் களவாடிச் சென்றார். தமிழுக்கு வருவாரா, மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘கரு’ மூலம் அறிமுகமாகி இப்போது தனுஷ் ஜோடியாக ‘மாரி-2’ படத்தில் சிறப்பாக நடித்து, கொலிவுட் ஏரியாவில் மையம் கொண்டிருக்கிறார். அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“நல்லா தமிழ் பேசறீங்க. பாடுவீங்கன்னும் கேள்விப்பட்டோம். ஆனா தமிழுக்கு வர்றதுக்கு ரொம்ப பிகு பண்ணீங்கன்னு சொல்றாங்களே...?”

“யாரோ என்னைப் பற்றி உங்க கிட்ட தப்புத்தப்பா சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் தயவுசெய்து கண்டுக்காதீங்க அண்ணா. நான் கோயமுத்தூர் பொண்ணு. நல்லா தமிழ் பேசுவேன். ஜார்ஜியா போய் படிச்சு டாக்டர் ஆகியிருக்கேன். மருத்துவம் பார்க்கலாம்னு நினைச்சுதான் படிச்சேன். ஆனா, திடீர்னு மலையாளத்தில் இருந்து ‘பிரேமம்’ பட வாய்ப்பு வந்தது. உடனே நடிக்க ஆரம்பிச்சேன். படம் ரிலீசான பிறகு என்னை எப்படி கொண்டாடினாங்கன்னு எல்லோருக்குமே தெரியும். இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் பந்தா பண்ணதில்ல. ‘டாக்டருக்கு படிச்ச நீ, சினிமாவில் நடிக்கலாமா?’ன்னு கூட என்கிட்ட கேட்கறாங்க.

நடிப்பு என்பது எனக்கு ரொம்ப பிடிச்ச தொழில். அதை நான் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு பண்றேன். இதை ஏன் மத்தவங்க விமர்சனம் பண்ணணும்னு தெரியல.” “மலையாளத்தில் ரிலீசான ‘பிரேமம்’ படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?”

“என் கனவில் கூட இப்படி நான் நினைச்சு பார்த்ததில்ல. டாக்டருக்கு படிக்க ஆரம்பிச்சப்ப, திடீர்னு அந்தப் படத்தில் நடிக்க கேட்டாங்க. சரி, ஒரே ஒரு படம் மட்டும் பண்ணுவோம்னு நினைச்சுதான் நடிச்சேன். ஆனா, படம் ரிலீசாகி ‘பிரேமம்’ மலர் டீச்சர் ரொம்ப பாப்புலராயிட்டாங்க. எங்கே போனாலும் மலர் டீச்சர் பற்றிதான் பேசினாங்க. நிறைய பெண்கள் என் கன்னத்தை பிடிச்சு கிள்ளி, ‘நீ எங்க வீட்டு மகாலட்சுமி’ன்னு கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க. இந்த அன்பும், பாசமும் என்னை என்னென்னவோ பண்ணிடுச்சு. அட, சினிமாவுக்கு இவ்வளவு பெரிய சக்தியான்னு நினைச்சு மலைச்சுப் போய் நின்னேன். சினிமா வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும், நடிச்ச படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகறது எல்லாம் கடவுள் செயல். ஸோ, எனக்கு இன்னைக்கு கிடைச்சிருக்கும் பேர், புகழ், அந்தஸ்து எல்லாத்துக்கும் கடவுள் கிருபையும், ரசிகர்களோட அன்பும், ஆதரவும்தான் காரணம்.”

“படிக்கிறதை பாதியிலேயே விட்டுட்டு, சினிமாவில் நடிக்கப் போறேன்னு சொன்னதும் உங்க வீட்டில் ஓ.கே சொல்லிட்டாங்களா?”

“ஆரம்பக்காலத்தில் நான் டி.வி நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டேன். அப்பதான் சினிமா வாய்ப்பு வந்தது. சில படங்களில் நடிச்சேன். நடிப்பை விட படிப்பு ரொம்ப முக்கியம்னு அப்பாவும், அம்மாவும் சொன்னாங்க. சினிமாவில் நடிக்கப் போனா என் எதிர்காலம் பாழாயிடுமோன்னு அவங்க பயந்ததில் நியாயம் இருக்கு. ஒரு படம்தானே நடிக்கப் போறேன்.

அதுக்கு பிறகு படிக்கப் போயிடறேன்னு வாக்கு கொடுத்து நடிச்சேன். ஆனா, ‘பிரேமம்’ படம் என் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டுட்டு போயிடுச்சு. இப்ப முழுநேர நடிகையா மாறிட்டேன். மலையாளத்தில் இருந்து தெலுங்கு. பிறகு அங்கே இருந்து தமிழுக்கு வந்து, இப்ப நான் வேற லெவலில் இருப்பதா நீங்களே எழுதறீங்க... சொல்றீங்க.”

“படத்தில் நடிக்க வைக்க உங்களை அணுகுவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லைன்னு சொல்றாங்களே, அது உண்மையா?”

“நான் ஒரு சாதாரணக் குடும்பத்தை சேர்ந்த பொண்ணு. திடீர்னுதான் சினிமா வெளிச்சம் என்மேல் விழுந்தது. ஒரே படத்தில் இந்தியா முழுக்க தெரிந்த நடிகையா மாறினேன்.

ஆனா, எந்த நிலையிலும் நான் பந்தா பண்ணவோ, கர்வமா நடந்துக்கிட்டதோ கிடையாது. நான்தான் பெரிய நடிகைன்னு பந்தா பண்றேன்னு வெச்சுக்குங்க. நாளைக்கே இன்னொரு திறமையான நடிகை வந்து, மத்த நடிகைகளை பின்னுக்கு தள்ளிட்டு போவாங்க. அதனால்தான் சொல்றேன், எப்பவுமே நான் பந்தா பண்ண மாட்டேன். என்னை முறைப்படி அணுகி பேசினா, அவங்க சொல்ற கதையும், அதில் என் கேரக்டரும் பிடிச்சிருந்தா நடிப்பேன். சினிமாவை பொறுத்தவரை எதுவும் நிரந்தரம் கிடையாது.

இன்னைக்கு சாதாரண நிலமையில் இருக்கிறவங்க, நாளைக்கே பெரிய இடத்துக்கு வரலாம்.”

“நடிக்க வந்த பிறகு டாக்டர் தொழிலை மறந்துட்டீங்க போலிருக்கே...?”

“அப்படி சொல்ல முடியாது. டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சுதான் படிச்சேன். இப்ப ஜார்ஜியாவில் படிச்சு முடிச்சு டாக்டராகவும் இந்தியாவுக்கு திரும்பி வந்துட்டேன். என் நோக்கம் என்ன தெரியுமா? மனிதர்களுக்கு நோய் வந்த பிறகு அதை கண்டுபிடிச்சு குணப்படுத்தும் வழக்கமான டாக்டரா இருப்பதை விட, ஒருத்தருக்கு ஏன் நோய் வருது? அந்த நோய் வராம தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னன்னு தீவிரமா ஆராய்ச்சி பண்ணணும். நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கணும். இதுதான் என் முக்கிய குறிக்கோள்.”

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை