தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வினோத் வீரசிங்கவுக்கு

பிரிமா சன்ரைஸ் பாண் - இலங்கை கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ந்து 11வது வருடமாகவும் கொழும்பு றோயல் கொல்ப் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டின் கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்களாக முறையே வினோத் வீரசிங்க மற்றும் தானியா மினெல் பாலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11வது வருடமாகவும் அனுசரணை வழங்குவதில் பிரிமா நிறுவனம் பெருமையடைகிறது. குழுமத்தின் பொது முகாமையாளரும், பிரதம அதிதியுமான டான் பெங் சுவான் இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், திறமை மிக்க 'இளம் கொல்ப் வீரர், வீராங்கனைகள் கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் ஊடாக உருவாவதையும், அவர்கள் வெளிப்படுத்திய உயர்மட்ட கொல்ப் திறமைகளையும் விசேடமாக சம்பியன்களாகிய வினோத் மற்றும் தானியா மினெல் ஆகியோரின் திறமைகள் மிகவும் திருப்திகரமாக அமைந்திருக்கின்றன' என்று கூறினார்.

ஆண்களுக்கான கனிஷ்ட சம்பியன்ஷிப் விருதை தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் வினோத் கைப்பற்றியுள்ளார். அடுத்த வருடமும் அவர் அதனைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதிச் சுற்றில் வினோத் 72 புள்ளிகளை (சம புள்ளிகளைவிட 01 புள்ளி அதிகமாக) அடைந்து கொண்டார். இது 2018 ஆம் ஆண்டில் அவர் பெற்றுக்கொண்ட மிகச் சிறந்த புள்ளிகளாகும். இரண்டாமிடத்தைப் பெற்ற ஹாறூன் அஸ்லமை விட 18 அடிகள் முன் சென்று அவர் இதனை அடைந்து கொண்டார். ஹாறூன் அஸ்லம் விக்டோரியா கொல்ப் மற்றும் கன்றி றிசோட்டைச் சேர்ந்தவராவார். ஹாறூன் இரண்டாமிடத்தை நுவரெலியா கொல்ப் கழகத்தின் பிரதிநிதியான துவர்ஷனை விட 9 அடிகள் முன் சென்று வெற்றி பெற்றார். துவர்ஷன் 2017 ஆம் ஆண்டின் சில்வர் பிரிவில் ஆண்களுக்கான கனிஷ்ட வெற்றியாளராவார்.

தானியா மினெல், தனது தொடர் திறமைகளை வெளிப்படுத்த இறுதிச் சுற்றில் 72 புள்ளிகளை (சம புள்ளிகளை விட 01 புள்ளி அதிகமாக) அடைந்து கொண்டு, இலங்கை திறந்த கனிஷ்ட பெண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார். இவர், இரண்டாம் இடத்தைப் பெற்ற கைலா பெரேராவை விட 17 அடிகள் முன்னிலையில் இருந்தார். கைலா பெரேரா, இரண்டாம் சுற்றில் சமமான புள்ளிகளைவிட இரண்டு அடிகள் குறைவாக அடைந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டின் சம்பியன்ஷிப் போட்டியில் இது அவரது மிகச் சிறந்த புள்ளிகளாகும்.

தொடர்ந்து முன்னேறி வரும் நிரேக் தெஜ்வானி, சில்வர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். 11 அடிகள் மூலம் அவர் இதனை வெற்றி கொண்டார். அவரது தொடர் போட்டியாளரான யனிக் குமார, ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்து வந்துள்ளார். எனினும், இறுதியில் நிரேக், சமமானதைவிட 03 அடிகள் முன்னிலையில் 74 புள்ளிகளோடு இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதி நாளில் இரண்டு அடிகள் முன்னிலையில் நின்று வெற்றியடைந்தார். மூன்றாம் இடத்தைப் பெற்ற தனூஷன், இரண்டாம் இடத்தைவிட இரண்டு அடிகள் மாத்திரமே பின்னால் இருந்ததோடு, நான்காம் இடத்தைப் பெற்ற லெவோன் நியரேபொலவை விட மூன்று அடிகள் முன்னணி வகித்தார்.

ஷனால் பினுக்ஷ, வெண்கலப் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்ற ரெஷான் அல்கமவை விட இவர் மூன்று அடிகள் முன்னணியில் இருந்தார். முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற இவர்கள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்ற பான் தெஜ்வானி மற்றும் கயா தலுவத்த ஆகியோரைவிட 15 மற்றும் 16 அடிகள் முன்னிலையில் இருந்தனர். வெண்கலப் பிரிவு 14 துவாரங்களைக் கொண்டு மூன்று சுற்றுக்களாக இடம்பெற்றன. இதன் மூலம் 10, - 11- வயது பிரிவு இளம் வீரர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படுகின்றது.

செப்புப் (கொப்பர் பிரிவு) பிரிவில் 9 வயதுக்குக் கீழ்ப்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 09 துவாரங்களைக் கொண்டு மூன்று சுற்றுக்களாக போட்டி இடம்பெற்றன. நுவரெலியா கொல்ப் கழகத்தின் பிரதிநிதியாக சீ.தரனியன் கலந்து கொண்டார். இவர், ஆரம்பம் முதலே முன்னணி வகித்து இறுதியில் 04 அடிகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வருன் பெர்னாண்டோ மற்றும் ரீ.தேஷான் ஆகிய முதல் மூவருக்கிடையில் 05 அடிகள் மாத்திரமே வித்தியாசம் காணப்பட்டது.

இப்போட்டிகளில் 75 க்கும் மேற்பட்ட கனிஷ்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஐந்து - வயதுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. இலங்கையின் கொல்ப், எதிர்காலத்திற்கான சிறந்ததொரு தயாரிப்பினை இங்கு காணக்கூடியதாக இருந்தது. பிரிமா குழுமம், கடந்த 11 வருடங்களாக இந்தப் போட்டிகளுக்கு அனுசரணைகளையும், ஆதரவினையும் வழங்கி வருகிறது. இலங்கை கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு மேலதிகமாக, அம்பாந்தோட்டை பிராந்திய கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் என்ற ஒரு புதிய போட்டித் தொடரை, அம்பாந்தோட்டை ஷன்கிரி-லா கொல்ப் அரங்கில் 2019 மார்ச் முற்பகுதியில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கொல்ப் கனிஷ்ட உப குழுவின் தலைவரான திருமதி நிலூ ஜயதிலக இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிடுகையில், 'கனிஷ்ட கொல்ப் தளங்களை நிறுவுவதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையின் நட்சத்திர கொல்ப் வீரர்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பிரிமா சன்ரைஸ் பாண் உற்பத்தியாளர்களான பிரிமா குழுமம் தொடர்ந்து 11 வருடங்களாக வழங்கி வரும் அனுசரணை இல்லையேல் இந்த கனிஷ்ட திறந்த கொல்ப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த எம்மால் முடியாது போயிருக்கும்' என்று கூறினார்.

இந்த வைபவத்தின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மறு நாள் காலை இடம்பெற்றது. பிரதம அதிதியும், பிரதான அனுசரணையாளருமான பிரிமா குழுமத்தின் பொது முகாமையாளர் திரு. டான் பெங் சுவான், சிலோன் அக்ரோ இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன, இலங்கை கொல்ப் யூனியனின் தலைவர் - ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம ஆகியோர் இலங்கை கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் பரிசுகளை வினோத், தானியா மினெல் மற்றும் ஏனைய வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பகிர்ந்தளித்தனர். இலங்கை கொல்ப் யூனியனின் செயலாளர் நிஷான் நவரத்ன மற்றும் ஜோன் ஸ்காத் ஆகியோர் கொல்ப் கனிஸ்ட கொல்ப் குழுவின் அங்கத்தவர் என்ற ரீதியில் பரிசுகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

கனிஷ்ட கொல்ப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்களுக்கும், 2018 ஆம் ஆண்டு கனிஷ்ட திறந்த பிரிவில் மிகச் சிறந்த பெறுபெறுகளைப் பெற்றுக்கொண்டோருக்கும், அனுசரணையாளர் என்ற ரீதியில் பிரிமா சன்ரைஸ் பாண் பரிசுப் பொதிகளைப் பெற்றுக்கொடுத்தது. இலங்கையில் கனிஷ்ட கொல்ப் போட்டிகளை பிரபல்யப்படுத்துவதில் மிக முக்கிய பங்கினை கனிஷ்ட கொல்ப் உப குழு தலைவர் திருமதி நிலூ ஜயதிலக, சந்தன வீரசிங்க மற்றும் ஜோன்ஸ் ஸ்காத் ஆகியோரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை