மாவட்ட ரீதியில் கடன் இணக்க சபைகளை அமைக்க நடவடிக்கை

கடன் இணக்க சபைகளை மாவட்ட ரீதியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனூடாக கடன்களைப்பெற அடகுவைத்த அசையா சொத்துக்களை மீட்கமுடியாது போனவர்கள் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் தலதா அத்தகோரல தெரிவித்தார்.

கடன் இணக்க (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கொழும்பை மாத்திரம் மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த கடன் இணக்க சபை மாகாண மட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது. மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே இச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருகின்றோம். 1945ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளோம். தமது காணிகள் மற்றும் வீடுகளை அடகுவைத்துப் பெறும் கடன்களால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கடன்செலுத்த முடியாத பட்சத்தில் அடகுவைத்த சொத்துக்களை மீட்பதற்கான காலத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக கடன்களுக்காக அடகுவைத்த அசையா சொத்துக்களை மீட்பதற்காக கடன் இணக்க சபை செயற்படுகின்றது என்பது பற்றி மக்களுக்குத் தெரியாது. கொழும்பை மையமாக கடன் இணக்க சபை அமைந்திருப்பதால் பலரும் இதனால் பயனடையாமலுள்ளனர். கடன் இணக்க சபையின் உறுப்பினர்கள் 5ல் இருந்து 11 ஆக அதிகரிப்பதற்கும் நாம் திருத்தத்தை முன்வைத்துள்ளோம்.

நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நிதிபதி ஒருவரே இதன் தலைவராக இருப்பார் என்பதுடன், நீதித்துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அரசாங்கம் வெறுமனே உறுதிமொழிகளை வழங்குகிறது ஆனால் நடைமுறைப்படுத்துவதில்லையென குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எனினும் அந்தக் காலம் முடிவடைந்துவிட்டது. பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வெறும் வார்த்தைகளில் மாத்திரமன்றி சகலவற்றையும் செயற்பாட்டில் காண்பித்து வருகின்றோம்.

அங்குனுகொலபெலஸ் சிறைச்சாலையில் பொறுப்புக்கூறும் அப்போதைய அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. வெலிக்கடை சிறைச்சாலையில் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது வாய்திறக்காமல் இருந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பிரதீபா மகாநாம, தற்பொழுது அங்குனுகொலபெலஸ் சிறைச்சாலை சம்பவத்துக்கு நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றார். பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளோம். எதிர்வரும் 25ஆம் திகதி இது தொடர்பில் பகிரங்கமாக அறிவிப்போம்.

தினேஷ் குணவர்தன (ஐ.ம.சு.மு)

உத்தியோகபூர்வமற்ற முறையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாரிய வியாபார நடவடிக்கைகள் புறக்கோட்டை, மருதானை பகுதிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றன. இவ்வாறான வியாபாரங்களில் அதிக வட்டிக்கு கடன்கொடுக்கும் செயற்பாடுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. இதனால் பணம் செலுத்த முடியாமலுள்ள இவற்றைக் கண்காணிப்பதற்கும் பொறிமுறையொன்று அவசியமாகும். நுண்கடன் நிதியங்கள் அதிக வட்டியில் வழங்கும் கடன்களாலும் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் ஆஷா மாரசிங்க (ஐ.தே.க)

நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட 52 நாட்களில் அங்குனுகொலபலஸ் சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி எல்.என்.ஜி மின்னுற்பத்தி தொடர்பில் கொரியா அரசாங்கத்துடன் அவசர அவசரமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஆகக் குறைந்த கேள்விப்பத்திரத்தை முன்வைத்த நிறுவனங்களைவிட தமக்குத் தேவையானவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழேயே புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரின் கீழே செயற்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தா (ஈ.பி.டி.பி)

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க விரும்புகின்றேன். அதேபோன்று, கண்டி மற்றும் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றும் அவை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறிய போதிலும், அவை தொடர்பில் இதுவரையிலும் எந்தத் தகவல்களும் இல்லை. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன் என்பதால் அந்த வேதனைகளை நான் நன்கறிவேன்.

கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அண்மையில் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் இரு விசாரணைக் குழுக்களை நியமித்தது. அதன் ஒரு குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

‘சிறைக் கைதிகளும் மனிதர்கள்” என சிறைச்சாலைகளின் வெளிச் சுவற்றில் வெளியில் இருப்போருக்குக் காட்டிக் கொண்டு, உள்ளே நிர்க்கதியாக இருக்கின்ற சிறைக் கைதிகளைத் தாக்குவது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத மோசமான செயலாகும்.

எனவே, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் எவ்விதமான விடயங்களை முன்வைத்திருக்கின்றனவோ தெரியாது. எனினும், இத்தகைய மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள், இனிமேல் இவ்வாறு வேறொரு சம்பவம் நிகழாதிருப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

சுமேதா ஜீ ஜயசேன (ஐ.ம.சு.மு)

கடன் இணக்க சபையின் உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு அனுபவம் மிக்க நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை நியமிப்பதன் ஊடாகவே மக்களின் கடன் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை தீர்க்க முடியும். இதற்காக கொண்டுவரப்படும் திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை. மெனராகலை போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் கடன் இணக்க சபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

வடக்கு, கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் கெடுபிடிகளை மேற்கொண்டபோது அவர்களை நுண்கடன் திட்டத்தின் மூலமாக அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றியுள்ளனர். ஒரு இலட்சம் ரூபாவை கடன் பெற்றவர்களிடம் 30 வீதத்திலிருந்து 50 வீதம் வட்டி அறவிடப்பட்டுள்ளது. 30 வீதத்தை அறிவிட்டபோது கடன்களை மீளச் செலுத்தமுடியாதபோது அவர்களின் கடன்தொகைகளைவிட வட்டித்தொகை அதிகரித்தது. இதனை நிவர்த்திசெய்ய தமது நகைகளை அடகுவைத்தனர். இவற்றை நிவர்த்தி செய்ய முடியாது போயுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதித்துறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றை கண்டுகொள்ளாதிருந்தவர்கள் தற்பொழுது நீதித்துறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும், தற்போதைய நீதியமைச்சர் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒக்டோபர் 26ஆம் திகதியின் பின்னர் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நாடு இருண்ட யுகத்துக்குச் சென்றது. சுற்றுலாப் பயணத்துறை உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செலுத்தும் துறைகளை அரசாங்கமே அழித்துவிட்டமையை நினைவுகூரவேண்டும். எதிர்க்கட்சியில் தற்பொழுது இருப்பவர்கள் இதனை மறந்துவிட்டுப் பேசுகின்றனர்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் சிறுபான்மைச் சமூகம் அதனை கவிழ்த்துவிடக்கூடாது என்பதில் நாம் அக்கறையுடன் இருப்பதுடன், கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது சிறுபான்மை இனத்தவர்கள் பிரிந்து நிற்காது, நாட்டின் ஜனநாயகத்தைப் பலப்படுத்த ஒன்றிணைந்தவர்களாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். இதனூடாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு 52 நாள் அரசியல் குழப்பம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சிவஞானம் சிறிதரன் (த.தே.கூ)

நுண்நிதி கடன்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆசைவார்த்தைகள் கூறப்பட்டு நுண்நிதி கடன்களை வழங்குபவர்களின் முகவர்கள் சென்று கடன்களை வழங்கி பெரும்பாலானவர்களை கொலைக் களத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். வடக்கில் இதுவரை 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கிழக்கிலும் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி பேசப்படுகின்றபோதும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 26 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவை விவசாயத்தை வாழ்வதாரமாகக் கொண்டவை. இக்குடும்பங்களின் 2260 குடும்பங்களுக்கு மாத்திரமே 10 ஆயிரம் ரூபா நஷ்டஈடு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய எவருக்கும் இந்தத் தொகை கொடுக்கப்படவில்லை. பிரதமர் மற்றும் சபாநாயகரின் வார்த்தைகளுக்கு அதிகாரிகள் மரியாதை செலுத்தாமையையே இங்கு காணமுடிகிறது. இரணைமடு குளத்தின் கீழான கிராமங்களின் ஊடாகச் செல்லும் தண்ணீர் கண்டாவளை கிராமத்தை மூடிப்பாய்ந்து செல்கிறது. நெல்லு பூக்கும் காலத்தில் வெள்ளம் மூடிப்பாய்ந்தால் நெல் பாதிக்கப்படும். கண்டாவளை கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர். இவர்களின் நெல் அழிவுகளை விவசாய காப்புறுதி நிறுவனம் சென்று பார்வையிட்டுவிட்டு நஷ்டஈடு செய்ய முடியாது எனத் திரும்பியுள்ளனர். நெல் வயல்களை அளவிட்டு காப்புறுதிகளை வழங்குவதில் விவசாய காப்புறுதி நிறுவனம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுகின்றது.

சுய பொருளாதாரத்திலிருந்து மாறி பிறப்பாக்கம் செய்யப்பட்ட விதைகளுடன் சேர்ந்தே படைப்புழுக்களும் நாட்டுக்குள் வந்து விவசாயிகளைப் பாதித்துள்ளன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பது பற்றி ஆராயப்படுகிறது. தென்பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை கவனத்தில் கொள்கின்றோம். ஏன் வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினை, மனிதாபிமான ரீதியில் நோக்கப்படுவதில்லை.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை