முன்னைய அரசின் முடிவின்படி மாகாண சபை தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டும்

முன்னைய 52 நாள் அரசாங்கம் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி எடுத்திருந்த அமைச்சரவை முடிவின்படி பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றை கொண்டுவந்து மாகாண சபை தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டிய அவசியத்தை கருத்திற்கொண்டு முன்னைய 52 நாள் அரசாங்கத்தின் அமைச்சரவை மேற்படி யோசனையை கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அங்கீகரித்தது. அத்துடன் முன்னைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்கீழ் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை இந்த தடவை மட்டுமே பெறக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறெனினும் இந்த அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் உத்தேசத்தில் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தோல்வி பயத்தில் உள்ளனர்.

பலம் மிக்க, தேசாபிமானத்துடன் கூடிய முன்னேற்றகரமான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் தேர்தலில் அமோக வெற்றியை பெறும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துமாறு கேட்க முடியாது ஏனெனில் அதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கூறியவாறு பேசினார்.

மத்திய, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களின் பதவிக்காம் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் தென், மேல் மாகாண சபைகளின பதவிக் காலமும் முடிவடைந்துவிடும். அதேநேரம் ஊவா மாகாண சபையின் பதவிக் காலமும் இவ்வருடம் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். 9 மாகாண சபைகளில் ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அந்த மாகாண சபைகளுக்கு புதிய பிரதிநிதிகளை தெரிவுசெய்ய தேர்தல் நடத்தப்படாததையிட்டு பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். நாட்டில் ஜனநாயகம் நிலைக்க உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். எனவே தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

 

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை