அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

 இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும், 16 பேர் அடங்கிய இலங்கை அணி (8) வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கு தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, குறித்த சுற்றுப் பயணம் நிறைவடைந்த பின்னர் பங்குபற்றும் இந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்கு உள்ளாகியிருந்த சகலதுறை வீரரான அஞ்செலோ மெத்திவ்ஸ் இடம்பிடிக்கத் தவறியிருக்கின்றார்.

அத்தோடு நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்க தவறியிருந்த தனுஷ்க குணத்திலக்கவும் அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் இணைக்கப்படவில்லை.

இலங்கை டெஸ்ட் அணியில் குசல் ஜனித் பெரேராவிற்கு நீண்ட காலத்திற்குப் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியினை தினேஷ் சந்திமால் வழமை போன்று வழிநடாத்த, நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றும் குறித்த தொடரின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது போயிருந்த துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் தொடர்ந்தும் நீடித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்டிருக்கும் அணியின் அடிப்படையில் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை திமுத் கருணாரத்ன, தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரொஷேன் சில்வா போன்ற வீரர்களால் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் போன்று அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறையினை சுரங்க லக்மால் முன்னெடுக்க அவருக்கு நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் உறுதுணையாக இருக்கவுள்ளனர்.

மறுமுனையில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறைக்கு பலம் சேர்க்கும் வீரர்களாக தில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய வீரர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 24 ஆம் திகதி, பிரிஸ்பேன் நகரில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இடம்பெறுவதுடன் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கன்பரா நகரில் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இலங்கை அணி –

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன (பிரதி அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை