கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

மலையகத்தில் தொடர்ந்தும் எதிர்ப்புப் போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிப்பது தொடர் பான கூட்டுஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்தாகிறது.  

மூன்று மாத கால இழுபறியின் பின்னர் முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று (28) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதுடன், இதுவரை காலம் 500 ரூபாயாக இருந்த நாளாந்த அடிப்படைச் சம்பளம் புதிய ஒப்பந்தத்தின்படி 700 ரூபாயாக அதிகரிக்கின்றது.அத்துடன், தேயிலை விலைக்கேற்ப வழங்கப்பட்டு வந்த 30 ரூபாய் கொடுப்பனவும் 50 ரூபாயாக அதிகரிக்கப் படுகிறது.  

 எனினும் வழங்கப்படவுள்ள 700 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்தும் வாக்களித்த 1000 ரூபா சம்பள உயர்வே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் நேற்றும் மலையகம் உட்பட சில பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத பல சங்கங்களும்நேற்று தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாக அன்றி முதலாளிமார்களுக்கு சார்பாகவே புதிய ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் இன்றையை ஒப்பந்தம் கைவிடப்பட வேண்டும் எனவும் பல சங்கங்கள் கோரியுள்ளன.

கொழும்பில் ஊடக மாநாடொன்றை நடத்திய மக்கள் தொழிலாளர் சங்கம், நியாயமான சம்பள அதிகரிப்பொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் இணக்கம் காணப்பட்டதாக கூறப்படும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மீண்டும் பாரிய துரோகம் இழைத்து தொழிலாளர்களை ஏமாற்றும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடத் தயாராவதாக மக்கள் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் இ.தம்பையா குற்றஞ்சாட்டியிருந்தார். தொழிலாளர்கள் மீண்டும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கையொப்பம் இடக் கூடாதென வலியுறுத்துவதாக அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் தெரிவித்தார். ஆயிரம் ரூபாவை கோரிக்கையாக வைத்து 750 ரூபாவை பெற்றுக்கொடுப்பவர்கள் தொழிலாளர்களின் தலைவர்கள் அன்றி துரோகிகள் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஐ.ம.சு.மு, ஜே.வி.பி, முற்போக்கு கட்சி என்பனவும் 700 ரூபா அதிகரிப்பை கண்டித்துள்ளதோடு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து 1000 ரூபா பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளன. வரவு செலவுத் திட்டத்தினூடாகவேனும் 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கம்பனிகள் அதிகரிப்பு வழங்காவிடின் எஞ்சிய தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும் ஜே.வி.பி மத்திய குழு உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். 50 ரூபாவிற்காக தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துள்ளதாக முற்போக்கு கட்சி முக்கியஸ்தரான துமிந்த நாமுவ கூறியுள்ளதோடு முதலாளிமார்களுக்கு சாதகமாகவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கண்டித்துள்ளார்.  

தொழில் திணைக்களத்தில் கடந்த வௌ்ளியன்று நடைபெற்ற ​பேச்சுவார்த்தையிலே புதிய சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் காணப்பட்டது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்  

செயலாளரான இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான்,  தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சூழலிலேயே முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் பல சுற்றுபேச்சுக்களும்நடத்தப்பட்டிருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்திலும் பல தடவைகள் விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையிலே கடந்த வெள்ளியன்று முதலாளிமார் சம்மேளத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதன்போது 700 ரூபாயாக அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க, இருதரப்பும் உடன்பட்டன. வரலாற்றில் என்றுமில்லாத நியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுத்ததாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் அறிவித்த போதும் பல தோட்டத் தொழிலாளர் அமைப்புகள் 700 ரூபா அதிகரிப்பை நிராகரித்துள்ளன. இது தவிர மலையகத்தின் சில பகுதிகளில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி நேற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பொகவந்தலாவ உட்பட சில பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில்  

ஈடுபட்டதோடு இரண்டாவது நாளாக நேற்றும் ஹற்றன் மல்லியப்பூ சந்தியில் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்றும் மலையகத்தில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக அறிய வருகிறது.இந்த எதிர்ப்பிற்கு மத்தியில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு இரு தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளன.(பா)    

(நமது நிருபர்)

Mon, 01/28/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை