களத்தில் குதிப்பாரா கமல்?

திருவாரூர் தொகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 28-ம் திகதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.

31-ம் திகதி வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் எந்தக் கட்சி சார்பாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின்னர், அவர் சந்திக்கப் போகும் முதல் தேர்தலாக திருவாரூர் தேர்தல் மாறியுள்ளது. முதல் தேர்தலே மிக முக்கியமான ஒன்றாக ஆகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது தற்போது பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. கு. ஞானசம்பந்தம், சினேகன் உள்ளிட்ட சில பிரபலங்கள் கட்சியில் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாராவது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவார்களா என்ற கேள்வி உருவாகி உள்ளது.

கமல்ஹாசன் ஏற்கனவே டெல்டா தொகுதிகளில் நற்பெயர் பெற்று இருக்கிறார். கஜா புயலின் போது மக்களுக்கு உதவியது, கஜா சேத நிலவரங்களை பார்வையிட்டது, என்று நிறைய நற்பெயர்களை கமல்ஹாசன் பெற்று உள்ளார். மக்கள் நீதி மய்யம் இங்கு போட்டியிடும் பட்சத்தில், கமல்ஹாசன் இன்னும் நேரில் போய் மக்களுடன் மக்களாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஒருவேளை இந்தத் தொகுதியில் கமல்ஹாசனே மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உருவாகி உள்ளது. அப்படி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அது மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில சமயங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. கமல்ஹாசனும் மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியும் நல்ல நட்பில் இருந்தவர்கள். கருணாநிதி மீது கமலுக்கு நிறைய மரியாதை இருப்பதால், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை இந்த முறை மட்டும் தவிர்க்க வாய்ப்புள்ளது.

இதேவேளை "நான் விதையை போட்டு விட்டேன். நீங்கள்தான் அதை அறுவடை செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் நேற்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"அரசியல் மற்றும் சமூக தளத்தில், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் என்கிற, புதிய அரசியல் கட்சியினையும் மய்யம் என்கிற புதிய சிந்தனையின் மூலம் மிகப்புதிய அரசியல் தெளிவுரையை அறிமுகப்படுத்திய வகையில்,2018 ஆண்டு  நம்மைப் பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகவே இருந்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம்  2018ம் ஆண்டு மாற்றத்திற்கான விதையை விதைத்து இருக்கின்றது. அந்த விதையின் வீரியமிக்க விளைச்சலை, தமிழர்கள் அறுவடை செய்யும் ஆண்டாக 2019 இருக்க வேண்டும். இருக்க வைப்போம். இந்த ஆங்கிலேய புத்தாண்டு  புதிய அரசியல், சுதந்திரத்திற்கான களமாகவும் நம் தமிழர்களின் எழுச்சியாகவும்  தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்" என்று கமல் கூறியுள்ளார்.

Wed, 01/02/2019 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை