ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் செயற்பாடு ஏற்புடையதல்ல

ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை நடந்துகொள்வது ஏற்புடையதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அமையவே அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாதப் பிரதிவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே தினேஷ் குணவர்தன எம்.பி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசியலமைப்புப் பேரவையில் சிரேஷ்டத்துவம், திறமை என்பவற்றுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. அரசியல் ரீதியான விருப்பு வெறுப்புக்கு மாத்திரமே மதிப்புக்கொடுக்கின்றனர். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை செயற்படுவது பொதுத்தமான நடவடிக்கையாக அமையாது. அரசியலமைப்புக்கு அமைவான கொள்கைக்கு அது முரணானதாகும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்தார். ​எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு அரசியலமைப்புப் பேரவையில் தற்பொழுது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புப் பேரவை பின்பற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கை என்ன என்பது கூட இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஒரு மாதம் ஒரு முடிவும், அடுத்த மாதம் மற்றுமொரு முடிவும் எடுக்கின்றனர் என்றார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்பி, அரசியலமைப்புப் பேரவையில் அரசியல் ரீதியான முடிவுகளே எடுக்கப்படுகின்றன. பிரதமர் தாக்கம் செலுத்துகின்றார். நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதாயின், எப்.சி.ஐ.டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் முடிந்தும் ஏன் இன்னமும் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பிரதம நிதியரசராக ஈவா வனசுந்தரவின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்தபோது அரசியலமைப்புப் பேரவை அதனை நிராகரித்தது என்றும் குற்றஞ்சாட்டினார்.

எனினும், நீதியரசர் ஈவா வனசுந்தரவின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு ஒருபோதும் அனுப்பிவைக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அத்துடன், அரசியலமைப்பு பேரவையினால் இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் அரசியலமைப்புக் உட்பட்டு சட்டரீதியான சுயாதீனமான முடிவுகளாகும். எவருடைய முகங்களைப் பார்த்தும் நாம் எந்த நியமனங்களையும் வழங்குவதில்லையென்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை