ஆயுதங்கள் மீட்கப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதாலேயே ஆயுதங்களை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். விசாரணைகளை மூடிமறைக்காமல் நியாயமாக பொலிஸார் நடந்துவருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மாவனல்ல பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்து ஆயுதம் மீட்கப் பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னர் புத்தளம் பகுதியிலிருந்து ஆயுதங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். சர்வதேச நாடுகளின் பின்னணியிலிருந்து இந்த ஆயுதங்கள் கொண்டுவரப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரிெயல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதேநேரம், விமல் வீரவன்ச இனவாத ரீதியில் கருத்துக்களை முன்வைப்பதாகத் தெரிவித்த பிரதியமைச்சர் நளின் பண்டார, ஆயுதங்கள் யார் வைத்திருந்தாலும் அது தவறு என்றும் கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், ஆயுதங்கள் யார் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டாலும் அவர்களின் இனங்களை சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லை. காவியுடை அணிந்தோரும், வெள்ளை ஆடைகளை அணிந்தோரும் இல்லாத தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். கேகாலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் வீட்டிலிருந்தும் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. முஸ்லிம்களின் வீட்டிலிருந்தா, சிங்களவர் வீட்டிலிருந்தா அல்லது தமிழர்களின் வீட்டிலிருந்தா ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன என்பது பிரச்சினையல்ல. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையே பிரச்சினையாகும்.

இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். இந்த விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்வது முற்றிலும் தவறு. வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி இல்லாத இனவாதத்தைத் துாண்ட சிலர் தயாராகின்றனர். இதனைத் தடுத்து நிறத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை