அமெரிக்க அரசின் முடக்கம் புத்தாண்டிலும் தொடர்கிறது

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கம் புத்தாண்டிலும் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனநாயகக் கட்சியினரின் கோரிக்கைகளுக்கு இனியும் செவிசாய்க்க முடியாது என்றும், தற்போது சமரசத்திற்கு வரவேண்டியது அவர்கள் முறை என்றும் வெள்ளை மாளிகை கூறியது.

ஜனாதிபதி அதற்காகக் காத்திருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

ஜனாதிபதி ஏற்கனவே விட்டுக்கொடுத்திருப்பதாக அவரது ஆலோசகர் கெல்லியேன் கான்வே கூறினார்.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைச் சுவருக்கு 25 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் டிரம்ப் 5 பில்லியன் டொலராகக் குறைத்துக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

எல்லைச் சுவர் நிதி ஒதுக்கீடு தொடர்பான கருத்து வேறுபாட்டால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமெரிக்க அரசாங்கம் பகுதி முடக்கத்தைச் சந்தித்துள்ளது. கள்ளக் குடியேறிகள் விவகாரத்தைச் சமாளிக்க எல்லைச் சுவர் அவசியம் என்பது ஜனாதிபதி கருத்து.

எல்லைச் சுவர் என்ற தீர்வு 21ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தாது என்றும் மக்களின் வரிப்பணத்தை அந்த வகையில் வீணாக்குவது தவறு என்றும் எதிர்த்தரப்பினர் கருதுகின்றனர். இரு தரப்பும் தங்கள் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.

இந்நிலையில், அரசாங்க முடக்கம் மேலும் நீடிக்கலாம் என்று கவனிப்பாளர்கள் எண்ணுகின்றனர்.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை