ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு ஈடேற அரச ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பு அவசியம்

மக்களின் அபிலாஷைகள், உன்னத தேசம்; ஜனாதிபதியின் செயலாளர்

பொதுமக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் உன்னத தேசம் பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பை ஈடேற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் புத்தாண்டில் தமக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புத்தாண்டையொட்டி அனைத்து அரச ஊழியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த உதய ஆர்.செனவிரத்ன, கடந்த ஆண்டில் முகங்கொடுத்த சவால் நிறைந்த நிகழ்வுகளை நினைவிற்கொண்டு பிறந்திருக்கும் புத்தாண்டின் சவால்களை கூட்டாக வெற்றிகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் மனக்குறைகளைக் கேட்டறிந்து அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சிறந்த சேவையின் மூலம் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு ஒன்றிணையுமாறும் உதய ஆர்.செனவிரத்ன அனைத்து அரச ஊழியர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

புத்தாண்டின் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப் பட்டதுடன், அனைத்து பணிக்குழாமினரும் கூட்டாக அரச சேவை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Wed, 01/02/2019 - 09:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை