காணாமல் போனோர் குடும்பங்களின் உளரீதியான பாதிப்புகள் குறித்து முதன் முறையாக ஆய்வு

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உளரீதியாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து முதன் முறையாக ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உளவியல் வைத்திய நிபுணர்கள் இருவர் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். காணாமல்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பில் இலங்கையில் மாத்திரமன்றி உலகிலேயே நடத்தப்பட்ட முதலாவது உளவியல் ரீதியான ஆய்வு இது எனசுட்டிக்காட்டப்படுகிறது.  

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மனநல மருத்துவ பேராசிரியர் ஷெஹான் வில்லியம்ஸ், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவின் ஆலோசகராகவிருந்து தற்பொழுது மன்னார் வைத்தியசாலையில் பதில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றும் டொக்டர் அமில இசுறு ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். தென்மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 1989ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சி மற்றும் 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலைத் தாக்கம் ஆகியவற்றினால் காணாமல் போன 391சம்பவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  

இதில் 248சம்பவங்கள் கிளர்ச்சியின்போது காணாமல்போன சம்பவங்களாக அமைந்திருப்பதுடன் எஞ்சியவை சுனாமி பேரலைத் தாக்கத்தில் காணாமல் போனவையாகும். கிளர்ச்சியின்போது அதிகமான ஆண்களே காணாமல் போயுள்ளனர். இவர்களின் தாய்மார் மற்றும் மனைவிமார் பாரிய மனத்தளர்ச்சி நோய் மற்றும் நாட்பட்ட துயர கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வினை மேற்கண்ட டொக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

தமது உறவுகள் காணாமல்போய் பல வருடங்கள் கடந்துள்ளபோதும் அவர்களுக்காக நாளாந்தம் கதவுகளில் எதிர்பார்த்து நிற்பவர்கள் இருப்பதாகவும், அவர்களின் கண்ணீர் இன்னமும் ஓயவில்லையென்றும் டொக்டர் அமில சுட்டிக்காட்டியுள்ளார்.  

காணாமல்போன உறவுகளைத் தேடி அலைவதே குடும்பத்தினரின் நாளாந்த பணியாகவுள்ளது. பல கிலோ மீற்றர்கள் தேடியலைந்திருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.  

யுத்தத்தினால் வடக்கு, கிழக்கில் பலர் காணாமல்போயிருப்பதுடன் அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் தேடி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையிலேயே தென்பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு உளரீதியாக ஏற்பட்ட தாக்கம் தொடர்பில் முதன் முதலில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. 

Mon, 01/14/2019 - 08:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை