வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படுவது அவசியம்

ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார பிரிவின் தெற்காசிய திணைக்களத் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப் பாளருமான பர்கஸ் ஓல்ட் நேற்று முன்தினம் (22) தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா.

சம்பந்தன், 2015 இல் நடந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வழங்கிய ஆணையை சுட்டிக்காட்டினர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தினர். அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா.

சம்பந்தன்: சட்டத்துக்கு விரோதமான, அரசியல் சாசனத்திற்கு முரணான எந்தச் செயற்பாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன், 2016ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை,இதற்காக கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும்

இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசியல்யாப்பின் தேவை,அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளவை பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதில் அசமந்தத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.அதிகாரப் பரவலாக்கம் நேர்மையானதாகவும் நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் தமது அதிகாரங்களை உபயோகிக்ககூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் வலியுறுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இதனை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் உண்மையான பிரச்சினை அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் காணப்படும் அசமந்தப் போக்கே ஆகும் எனவும் விளக்கினார்.மக்கள் கைகளில் அதிகாரங்கள் செல்லுமானால் ஊழல் மற்றும் வளங்கள் வீண் விரயங்கள் குறைந்து விடும் என்பதால் ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப் படாத பட்சத்தில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சம்பந்தன்,

இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத் திலுள்ள சகல கட்சிகளதும் ஒத்துழைப்புடன் ஒரு அரசியல்யாப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும்,ஒருமித்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குள்ளேயே ஒரு தீர்வை எதிர்பார்ப் பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் வகிபாகம் குறித்து கருத்து தெரிவித்தஅவர், இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வது தவிர்க்க முடியாதது, சர்வதேச சமூகம் இந்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச் சந்திப்பின்போது இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை