கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு

RSM
கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு-Kinniya Illegal Sand Mining-22 Year Old Youth Body Found

இரண்டாமவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

திருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (29) காலை பத்து முப்பது மணி அளவில் மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் கைது செய்வதற்காக சென்றதையடுத்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து கடற்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பீதி அடைந்து, ஆற்றில் பாய்ந்த  மூவரில் ஒருவர் தப்பியுள்ளதோடு, மற்றைய இருவரும் காணாமல் போன நிலையில் அவர்களை இன்று காலை முதல் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (29) ஏழு முப்பது மணியளவில் குறித்த இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கிண்ணியா, இடிமன்  பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் முகம்மது பாரிஸ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதே வேளை காணாமல் போன இரண்டாமவரை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்களும் கடற்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
 

Tue, 01/29/2019 - 21:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை