எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ; பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பு

தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் நிராகரிப்பு

எதிரணியில் கூடுதல் எம்.பிக்கள் இருக்கும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பாராளுமன்ற குழுத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் வழமையே நீண்டகாலமாக பின்பற்றப்படுவதாக சபாநாயகர் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் எதிரணியில் அமர்ந்துள்ள கூடுதல் எம்.பிக்கள் இருக்கும் ஐ.ம.சு.மு பாராளுமன்றக் குழுத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பரிந்துரைப்பதாக ஐ.ம.சு.மு செயலாளர் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன், டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டதோடு எம்.பிக்கள் சிலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவில் இருந்து விலகும் அல்லது விலக்கப்படும் தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் அவரின் எம்.பி பதவி இரத்தாவதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி ஐ.ம.சு.மு செயலாளர் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்த கடிதத்தில் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் வெளியிட்ட சகல எம்.பிக்களும் தொடர்ந்து ஐ.ம.சு.மு எம்.பிக்களாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பில் சபாநாயகர் ஆழமாக ஆராய்ந்தார். சட்ட நடவடிக்கை மூலம் எம்.பி பதவி இரத்தாகுதல், எம்.பி ஒருவரின் கட்சி உறுப்புரிமை இழக்கப்படுதல் அல்லது பதவி விலகல் என்பன அரசியலமைப்பிற்கும் நிலையியற் கட்டளைக்கும் அமைய சபாநாயகரின் அதிகார எல்லைக்கு அப்பாற் பட்டதாகும். இவை தொடர்பில் முடிவு வழங்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக சபாநாயகர் கருதுகிறார்.

சில எம்.பிக்கள் இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரியிருந்தார்கள். இது தொடர்பாகவும் சபாநாயகர் கவனம் செலுத்தினார். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை எம்.பிக்கள் கொண்ட குழுவினால் சிறுபான்மையாக உள்ள குழுவின் உள்ளக பிரச்சினையை ஆராய்வது தொடர்பான யோசனையை ஏற்பது பாராளுமன்ற வழமைக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் முரணானது என அறிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை