மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மீண்டும் அதிகாரிகளுக்கு பணிப்பு

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மாற்றீடு செய்யப்பட்டிருப்பதால் அவற்றின் செலவீனங்களையும் உள்ளடக்கியதாக அறிக்கையை தயாரிக்குமாறு தாம் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த வருடம் நவம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் நடந்துகொண்ட முறையினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்வதற்கு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் சேதங்கள் குறித்த மதிப்பாய்வை கோரியிருந்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், "பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து நாம் கலந்துரையாடியிருந்தோம்.

எமது மதிப்பீடுகளின் படி சொத்துக்களுக்கான சேதம் 3,30,000 ரூபாவாகும். எனினும், மதிப்பீட்டுத் திணைக்களம் 1,75,000 ரூபாவாக மதிப்பீடு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் இரண்டு மூன்று வருடங்கள் பழமையானவை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும், மாற்றீடு செய்ததற்கான செலவாக அவற்றை எடுத்துக்கொண்டு மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்" என்றார்.

மோசமான முறையில் நடந்துகொண்ட சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட உறுப்பினர்களை விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது. சம்பந்தப்பட்ட சகல வீடியோ காட்சிகளையும் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளோம். இதனை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அவர் ஊடாக சட்ட மாஅதிபருக்கும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

"225 பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலங்களைப் பெறுவது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்துடன் நாம் கலந்துரையாடியிருந்தோம். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்போகின்றோமாயின் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியிருப்பதுடன், 225 உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருப்பது அவசியமாகும். இந்த விவகாரம் தோல்விகண்ட ஒன்றாக இருப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை. பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொகுதி தொகுதியாக வாக்குமூலங்களைப் பெறலாம்" என்றும் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, "ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம்வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருவதைத் தடுப்பதைத் தவிர வேறெந்த நடவடிக்கையையும் சபாநாயகர் எடுக்க முடியாது. எனவேதான் அந்த உறுப்பினர்களுக்கு எதிராக பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தைப் பயன்படுத்தவேண்டும் எனக் கூறுகின்றோம். இந்த விவகாரத்தை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான முயற்சிகளை எடுத்துள்ளனர்" என்றார்.

பிரதி சபாநாயகர் தலைமையிலான இந்தக் குழுவில் சமல் ராஜபக்‌ஷ, பிமல் ரத்னாயக்க, மாவை சேனாதிராஜா, ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் உள்ளடங்குகின்றனர். எனினும் சந்திரசிறி கஜதீர மற்றும் சமல் ராஜபக்‌ஷ ஆகியோர் இந்த விசாரணைகளில் கலந்துகொள்ளவில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி இக்குழு மீண்டும் கூடவுள்ளது.

டிஸ்னா முதலிகே

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை