வெற்றிகளைப்போன்று எதிர்கால சவால்களையும் எதிர்கொள்வோம்

அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அடித்தளம்

நான்கு வருடங்களில் பெற்றுக்கொண்ட   வெற்றிகளைப் போன்று  சந்தித்த தோல்விகளையும் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தோல்விகளை வெற்றிகொள்ள எதிர்வரும் குறுகிய காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.  

வறுமையொழிப்பு உள்ளிட்ட எதிர்கொள்ள நேரும் சவால்களை எதிர்வரும் குறுகிய காலத்தில் வெற்றிகொள்ள முடியும் என்றும் அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

லக்கலை புதிய நகர அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தை மக்களுக்குக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றன.  

அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, அர்ஜுன ரணதுங்க, சந்திராணி பண்டார, பி. ஹரிசன் உட்பட அமைச்சர்கள், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேற்படி நிகழ்வுகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் லக்கலை விளையாட்டரங்கில் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது:  

அரசாங்கத்தின் முக்கிய நோக்கமான இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயங்களை இல்லாதொழிக்க அனைவரும் கைகோத்துச் செயற்பட வேண்டும். 

தேசிய பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் மொரகஹகந்த- களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய கட்டம் நடைமுறைக்கு வந்ததில் மகிழ்ச்சி யடைகிறேன்.  

2015ஜனவரி 08ஆம் திகதி நாட்டின் தலைவராக மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் மக்கள் சேவகனாக அர்ப்பணிப்புடன் 4வருடங்கள் சேவையாற்றி யுள்ளேன்.  

கடந்த நான்கு வருடங்களில் இந்நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடிந்துள்ளது. நாட்டில் அமைதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பயம் சந்தேகமின்றி மக்கள் வாழக் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் நிலையை உருவாக்குவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.  

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  

கடந்த நான்கு வருடங்களில் நாம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டுள்ளோம். இதற்காக எமக்குப் பெரும் அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டியிருந்தது.  

நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் பல வெற்றிகளையும் சிலவற்றில் தோல்விகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. வெற்றியைப் போன்றே தோல்வியும் அமைந்தது.  

வெற்றிகள் தொடர்பில் பேசுவது போன்று எதிர்கொண்ட தோல்விகளைத் தோற்கடித்து அவற்றையும் வெற்றிகொள்வதற்கு எதிர்வரும் குறுகிய காலத்தில் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். மக்களுக்காகவே இதை மேற்கொள்வேன்.  

தோல்விகள் பற்றிக் குறிப்பிடும் போது, தேசிய சகவாழ்வு சிந்தனையின் அடிப்படையான அரசு மற்றும் அரச பொறிமுறைகளில் ஊழல், மோசடி, வீண் விரயம் என்பவற்றை நாம் குறிப்பிட முடியும். இந்தத் தோல்விகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகிறது.  

நாட்டைக் கட்டியெழுப்பவும் நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிக்கவும் நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்துடனான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.  

அதே போன்று நாட்டின் பெரும் சவாலான ஊழல் மோசடியை முழுமையாக இல்லாதொழிப்பது முக்கிய அம்சமாகும். நாட்டை வீழ்ச்சிக்குள்ளாக்கும் இத்தகைய சீரழிவை ஒழிப்பதற்கு நாம் அனைவருமே கைகோத்துச் செயற்படுவது அவசியமாகும்.  

நாடடின் முதலாவது பசுமை நகரம் லக்கலயில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னொரு போதுமில்லாது முழுமையான நவீன நகரமொன்று மக்களுக்குக் கையளிக்க ப்பட்டுள்ளது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும்.  

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. டி. எஸ். சேனநாயக்கவின் கமத்தொழில் பாரிய செயற்திட்டம், எனது தந்தையாரும் அதில் முக்கிய பங்களிப்புச் செய்த ஒருவராவார். விவசாயப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்த விவசாயி ஒருவரின் மகன் நான் என்பதில் பெருமையடைகின்றேன். இதனால் எனது வாழ்க்கையும் விவசாயத்தோடு பிண்ணிப் பிணைந்ததாயுள்ளது. 

இந்த வகையில் மகாவலி பாரிய திட்டத்தின் இறுதி செயற்திட்டத்தை நாம் தற்போது நிறைவு செய்துள்ளோம்.  

விக்டோரியா, ரண்டம்பே, ரந்தெனிகல, மாதுறுஓயா நீர்த் தேக்கத்திட்டத்தின் மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் இறுதிப் பாரிய திட்டமே தொரகஹகந்த – களுகங்கை நிர்ப்பாசனத் திட்டமாகும்.  

மகாவலி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பைப் பெற முடிந்தது. இது போன்ற பாரிய திட்டங்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்களில் சி. பி. பீ. சில்வா, மைத்திரிபால சேனநாயக்க, காமினி திசாநாயக்க, காமினி அத்துகோரள ஆகியோர் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். சி.பி. பீ. சில்வாவைத்தவிர ஏனைய அனைவருடனும் எனக்குத் தொடர்பிருந்தது.  

பாடசாலை மாணவனாக கிராமத்தின் பிரச்சினைகளை கடிதமாக எழுதிக்கொண்டு சென்று சி. பி. பீ. சில்வாவை சந்தித்துள்ள சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.  

1990காலகட்டங்களில் காடாக விளங்கிய மொரகஹகந்தைப் பகுதியில் நீர்த்தேக்கத் திட்டத்திற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி அதற்கு வித்திட்ட கலாநிதி குலசிங்க போன்றோர் மறக்க முடியாதவர்கள். அதேபோன்று மொரகஹகந்தை திட்டத்திற்குப் பெயர் சூட்டியவரும் அவரே.  

இன்றைய இந்த முக்கியமான நிகழ்வுக்கு வருகை தருமாறு நான் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். இன்று பாராளுமன்ற அமர்வு தினமாகையால் அவர்கள் களுகங்கை திட்ட நிகழ்வில் மட்டும் கலந்து கொண்டு பாராளுமன்றம் திரும்பி விட்டனர். அவர்கள் எனது நன்றிக்குரியவர்கள்.  

2016ஜூலை 25ஆம் திகதி களுகங்கை நீர்த்தேக்கத்திட்டததிற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு இலட்சம் ஏக்கர் காணியில் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு 4,60,000ஏக்கர் காணி உபயோகிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும் நீர்த்தேக்கமான மொரகஹகந்த- களுகங்கை திட்டத்துக்கு 6,60,000ஏக்கர் காணி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  

லக்கலை பசுமை நகரத்திற்கு மாத்திரம் நாம் 215கோடி ரூபா நிதியைச் செலவிட்டுள்ளோம். 112புதிய கட்டிடங்கள் நகரில் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இப்பகுதி வீதிகளை நிர்மாணிக்க 950கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.  

 குடி நீர்த் திட்டத்திற்கான முதலீடாக 450 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவற்றுக்கான மொத்த செலவு 26,000 கோடியாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Wed, 01/09/2019 - 07:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை