தலிபான்–அமெரிக்கா இடையே அமைதி பேச்சு இன்று ஆரம்பம்

ஆப்கான் தலிபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கட்டாரில் இன்று இரண்டு நாள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். எனினும் இந்த சந்திப்பில் ஆப்கான் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என்று சிரேஷ்ட தலிபான் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆப்கான் அரச தரப்பை பங்கேற்கச் செய்யும் பல பிராந்திய சக்திகளின் கோரிக்கையை தலிபான்கள் நிராகரித்தனர். 17 ஆண்டு யுத்தத்தில் அமெரிக்காவே தனது பிரதான எதிரி என்று குறிப்பிடும் தலிபான்கள் ஆப்கான் அரசை ஒரு கைப்பாவை நிர்வாகம் என்று குறிப்பிடுகிறது.

2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படையினரால் கவிழ்க்கப்பட்ட அரசை மீண்டும் கொண்டுவர தலிபான்கள் போராடுகின்றனர். அந்த அமைப்புடன் அமெரிக்க அதிகாரிகள் இந்த வாரம் சவூதி அரேபியாவிலேயே சந்திக்க ஏற்பாடாகி இருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கான் அரசையும் இணைத்துக் கொள்ள முயற்சித்த சவூதி இந்தப் பேச்சுவார்த்தையை ரத்துச் செய்தது.

தலிபான்களுடனான நான்காவது பேச்சுவார்த்தையாக இது இருப்பதாக அமெரிக்க சிறப்பு தூதுவர் சல்மாய் கலில்சாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க துருப்புகள் வெளியேறுவது, கைதிகள் பரிமாற்றம் மற்றும் தலிபான் மற்றும் அதன் தலைவர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தலிபான் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு அந்நாட்டின் நீண்டகால வெளியாட்டு இராணுவ நடவடிக்கையாக உள்ளது. இது அமெரிக்காவுக்கு சுமார் ஒரு டிரில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தி இருப்பதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை