பாராளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த பணிகளை பொறுப்பேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(22) பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.

நேற்று முற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்தில் மூன்றாவது மாடியிலமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் அதனை எதிர்க்கட்சி தலைவரின் செயலாளரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறிது காலமே எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருக்கப் போவதாகவும் விரைவில் இந்த அறையில் இருந்து வெளியேறி அடுத்த நிலைக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். ஐ.ம.சு.மு எம்.பிக்களுடன் சுவாரஸ்யமாக உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடந்த கால எதிர்க்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு சுட்டிக்காட்டிய எம்.பிகள் ''உங்களின் படம் இங்கே ஒரு இடத்தில்தான் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் படம் 4 இடங்களில் இருக்கின்றது.

அவரின் படம் 5ஆவது தடவையாகவும் இங்கு மாட்டப்பட வேண்டுமென பிரார்த்திப்பதாக குறிப்பிட்டனர். ஜானக வக்கும்புர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இவ்வாறு கூறினர்.

பணிகளை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுடனும் எம்.பிக்களுடனும் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து சென்றார்.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை