வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் குரேயையே நியமிக்க வேண்டும்

வடக்கிலுள்ள இந்துக்கள் தமது பாதுகாப்பிற்கு வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேவையே நம்பியுள்ளனர். அவர் இந்துக்களின் நண்பர். இந்துக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருபவர். வடக்கு ஆளுநராக றெினோல்ட் குரே தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என  சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டு,கொழும்புக்கு சென்றுள்ள நிலையில்,இலங்கை இந்துக்கள் சார்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன்விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

றெஜினோல்ட் குரே இந்துக்களின் இனிய நண்பர். இந்துக்களின் நன்மைக்காக அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து நிறைவேற்றி தருபவர். புதிய ஆண்டில் மாகாண ஆளுநர்களாக, புதியவர்களை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஆளுநராக றெஜினோல்ட் குரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் வடமாகாண இந்துக்கள் உள்ளனர்.

அவரை மாற்றுவதற்கு ஏதாவது யோசனை இருந்தால், அதனை கைவிடுமாறு இந்துக்கள் கோருகின்றனர். ஏனெனில் போரின் அழிவுகள், அவலங்கள், இழப்புக்களிலிருந்து மீட்கும் முயற்சியில், பாதிக்கப்பட்ட மக்களின் வலது கரமாக றெஜினோல்ட் குரே இருந்தார்.

வடமாகாண வளர்ச்சியில் அவர் காட்டும் அக்கறை அளப்பரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில், அவரே மாகாணத்தை ஆள்கிறார். வடக்கு இந்துக்கள் தமது பாதுகாப்பிற்கு றெஜினொல்ட் குரேவையே நம்பியுள்ளனர். இப்படியான ஆற்றல்மிக்க, அரசியல் அனுபவம்மிக்க, திறமைமிக்க ஒருவரை வடமாகாணம் எளிதில் இழந்துவிடக் கூடாது. அவரே ஆளுநராக தொடர வேண்டுமென இந்துக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்.

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

Tue, 01/01/2019 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை