அம்பாறை மாவட்ட சோளச் செய்கை முற்றாகப் பாதிப்பு: விவசாயிகள் கவலை

மேட்டுநில பயிர்களைப் பாதிக்கும் படைப் புழுக்களின் படையெடுப்பு

படைப்புழுக்களின் தாக்கத்தால் அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளம் உட்பட மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  

மேட்டு நிலப்பயிர்கள் மட்டுமன்றி நூற்றுக்கும் மேலான பயிர்களைத் தாக்கும் இப்புழுக்கள் அனுமதியில்லாது நாட்டுக்குள் கொண்டு வரப் படும் செடிகள், தாவரங்கள் மற்றும் காற்றின் மூலம் ஊடுருவி இருக்கலாமென விவசாயத் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். இப்படைப்புழுவானது அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள சோளச் செய்கையை வெகுவாகத் தாக்கி அழித்து வருகின்றது.சோளத்தின் இலைகளில் சிறிய துளைகளை ஏற்படுத்தி அவற்றை உண்ட பின்னர் சோளப் பொத்திகளை உண்பதால் இம் மாவட்ட சோளப்பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிப்புற்றுள்ளது. இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட   

31 ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கையில் 75 வீதமானவை இப்படைப்புழுக்களால் அழிக்கப்பட்டுள்ளன. நிலக்கடலை, பயறு, தக்காளி,வெண்டி,கரும்பு, சோளம் உள்ளிட்ட மரக்கறிப் பயிர் வகைகளையும் இப்படைப் புழுக்கள் சேதப்படுத்துகின்றமை தெரிய வந்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, தமண, பதியத்தலாவ, லகுகல, அட்டாளைச்சேனை அஷ்ரஃப்நகர், ஆலம் குளம், திருக்கோவில், பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களிலே இதன் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை மாத்திரமே ஜீவனோபாயமாக நம்பியுள்ள விவசாயிகள் இப்படைப்புழுவின் தாக்கத்தால்பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். தங்களால் செய்கை பண்ணப்படும் மேட்டுநிலப் பயிர்களை இரவு,பகல் பாராது காட்டு யானைகள்,பறவைகள், விலங்குகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் இவர்களுக்கு இப்படைப் புழுக்களின் புதிய படையெடுப்பு பெரும் சவாலாகியுள்ளது. இப்படைப்புழுக்களின் தாக்த்தைக் கட்டுப் படுத்த விவசாயத்துறையினர் பாரிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.  

இப்புழுக்கள் தொற்றியுள்ள பயிர்களின் மீதிகளை எரித்து அழிப்பதுடன் ஒரே காலப் பகுதிக்குள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு, மண்ணுடன் சேதனப் பசளைகளை கலந்துவிட வேண்டும் எனவும் விவசாயத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கிரிமிநாசினிகளும் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இப்படைப் புழுக்களால் பாதிப்புற்ற தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அம்பாறை மாவட்டத்திலிருந்து படைப்புழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)  

Wed, 01/23/2019 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை