பத்து வருட தோட்ட கணக்குகளை பரிசீலித்து பேச்சை தொடர வேண்டும்

தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை; ரூ.1200ஐப் பெற்றுக் கொடுக்க முடியும்

மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி சகல கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

கடந்த பத்துவருடங்களுக்கான தோட்டக் கணக்குகளை நுணுக்கமாக பரிசீலித்து அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன்,

மலையகத் தமிழர்களுக்கு உண்மையில் நாளாந்தம் 1200 ரூபாவையாவது பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாரம் ஒரு கேள்வியில் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் ஏன் குரல் கொடுப் பதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.

சகல கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும். அல்லது எல்லோரும் சேர்ந்து ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியைப் பேச விட வேண்டும். பேசுவதற்கு முதல் கடந்த பத்து வருட தோட்டக் கணக்குகளை எம்மவர் மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டும்.உண்மையில் அவர்கள் 1000 ரூபா நாட் சம்பளத்தைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்களா என்பதை ஆராய்வது அவசியம். எனக்குத் தெரிந்த வரையில் கணக்குகள் களவாகத் தயாரிக்கப் படுகின்றன. செலவுகளைப் பெருப்பித்து தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று கூறப்படுகிறது என்றே நம்ப வேண்டி உள்ளது. மலையகத் தமிழர்களுக்கு உண்மையில் நாளாந்தம் 1200 ரூபாயையாவது கொடுக்க வேண்டும். உண்மையில் கொடுப்பனவு செய்ய முதலாளிமாருக்குப் பணம் குறைவென்றால் அரசாங்கம் தலையிட்டு நிதியுதவி செய்ய வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் தமது தொழிற் சங்கங்களையும், கட்சிகளையும் முன்னேற்றுவதை மட்டும் பார்க்காமல் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் உண்மையான அக்கறை எடுக்க முன்வர வேண்டும்.

மலையகத் தொழிற்சங்கங்கள், கட்சிகள் ஆகியன தமது தொழிலாளர்கள் நாளாந்தம் படும் பாட்டை சித்திரித்துக் காட்ட வேண்டும். குறும் படங்கள் போன்றவை தயாரித்து அரசாங்கத்தினருக்கும் எம்மிடம் தேயிலை வாங்கும் நாட்டு மக்களுக்கும் அந்த நாடுகளின் அரசாங்கத்தினருக்கும் காண்பிப்பது சிறந்தது. வெறும் தேயிலை விற்பனைப் பிரசாரமாக அமையாது அவை மக்களின் நாளாந்த அல்லல்களை எடுத்துக் காட்டுவதாய் அமைவதும் அவசியம்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் குறைகள் அடிப்படையில் அரசியல், உரிமைகள், உரித்துக்கள் சார்ந்ததாகவுள்ளன. எனினும், மலையகத் தமிழ் மக்களின் குறைகள் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்ததாக உள்ளன . வடக்கு,கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளைக் கோரிப் பயணிப்பது ஒரு பாதை. மலையக மக்களின் பொருளாதார விருத்தி நோக்கிப் பயணிப்பது பிறிதொரு பாதை.

ஆகவே மலையக மக்கள் மீது எமக்குக் கரிசனை இல்லை என்று கூறமுடியாது. தேவை ஏற்படும் போது மலையகத் தொழிலாளர்கள் சார்பில் குரல் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.

ஆனால் குரல் கொடுத்தால் மலையகக் கட்சித் தலைவர்களும் தொழிற் சங்கத் தலைவர்களும் கூறுவார்கள் “உமக்கேன் இவ்வளவு கரிசனை?” “விக்னேஸ்வரன் மலையகத் தமிழ் மக்களின் விடயங்களில் அநாவசியமாக தலையிடுகின்றார் என்றெல்லாம் விமர்சிப்பர்.

இதனாலே கருத்துக்களை வெளியிடாது அவர்கள் மீது அனுதாபத்துடன் பயணித்து வருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

Wed, 01/02/2019 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை