வீதிப்போக்குவரத்தை மீறும் சாரதிகளின் அபராதத் தொகையை அதிகரிக்க திட்டம்

சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்துச் செய்ய நடவடிக்கை

வீதிப் போக்குவரத்தின் போது விதிகளை மீறிச் செயற்படும், தவறிழைக்கும் சாரதிகள் மீதான அபராதத்தை அதிகரிக்கப் போவதாகவும், மோசமாகத் தவறிழைப்போரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வீதிப் போக்குவரத்தின் போது கண்மூ டித்தனமாகச் செயற்பட்டு போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதுடன் சிலவேளை உயிரச்சுறுத்தல்கள் கூட இடம் பெறுகின்றன. கவனயீனமாகச் செயற்படும் இத்தகைய சாரதிகள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார். 

அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் இது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அபராதத் தொகையை பெருமளவு அதிகரிக்கவும், உயிரச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வது தொடர்பில் சட்டவிதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப் படுமெனவும் அமைச்சர்தெரிவித்தார். யுத்தத்தின் போது உயிரிழப்போரை விடவும் கூடுதலான எண்ணிக்கையானோர் வாகன விபத்துக்களினால் மரணிக்கின்றனர். இது வருடாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது. இத்தகைய சாரதிகள் விடயத்தில் சட்டத்தை கடுமையாக்கவுள்ளோம்.

சிலவேளை எனது இந்த முடிவு சிலருக்கு கசப்பாகக் கூட இருக்கலாம். அதற்காக இதனை கைவிட முடியாது. வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளை சரியாகக் கடைப்பிடிக்கும் சாரதிகளை இது எவ்விதத்திலும் பாதிக்காது. 

சில நாடுகளில் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்துக்கு இரத்துச் செய்யப்படுகின்றது.

இது போன்ற திட்டம் எமது நாட்டில் கிடையாது. அடுத்த சில மாதங்களுக்கு இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

(எம்.ஏ.எம். நிலாம்)

Thu, 01/24/2019 - 08:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை