அரசியலமைப்புச் சபையில் எந்த அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை

சட்ட மாஅதிபர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் நியமனங்களின் போது அரசியலமைப்புச் சபையில் எந்தவித அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை. இதனாலேயே சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்களாக அவை காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டே உயர் பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்வதுடன், பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ பெரும்பான்மை இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு தொடர்பில் சபையில் நேற்று நடைபெற்ற வாதப் பிரதிவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியலமைப்புப் பேரவையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இதன் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே உயர்பதவிகளுக்கான நியமனங்களை முடிவுசெய்கின்றனர். அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த சமல் ராஜபக்ஷ விலகியிருப்பதால் அவருடைய வெற்றிடத்துக்கு வேறொருவரை நியமிக்கவேண்டியுள்ளது. இது தொடர்பில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியே தீர்மானம் எடுப்போம். அடுத்த கூட்டத்தின் போது இதுபற்றிக் கலந்துரையாட முடியும்.

மேன்மையான நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது எந்தவித அரசியல் அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை. சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பதவிகளை வழங்குவதாயின் மார்க் பெர்னான்டோ பிரதமர நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் சிரேஷ்டத்துவம் பார்க்கப்படவில்லை. பிரதம நீதியரசராகவிருந்த ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், 18 ஆவது திருத்தத்தின் ஊடாக இதனை இல்லாமல் செய்தார். மஹிந்த ராஜபக்ஷ. இதனை இல்லாமல் செய்த ஜனாதிபதி, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியமை வரலாறு.

இவ்வாறான நிலையில் 19ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புப் பேரவைக்கு அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமன்றி சிவில் சமூகப் பிரதிநிரதிகளையும் நியமித்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்ட கோபத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு குறித்து கூச்சலிடுகின்றனர். இதனாலேயே நீதியரசர்களின் மதம் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கின்றனர்.

அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனை பாதிக்கச் செய்ய இடமளிக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் எமக்கு எதிராகவும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளன. பலரை வழக்குகளிலிருந்து விடுவித்துமுள்ளது. அவ்வாறான நேரங்களில் நல்லதாகத் தோன்றும் அரசியலமைப்பு பேரவை தற்பொழுது சரியில்லாததாகிவிடுகிறது.

சட்ட மாஅதிபர் நியமனத்தின்போதும், பொலிஸ் மாஅதிபர் நியமனத்தின் போதும் எந்தவொரு அரசியல் அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. சுயாதீனமான முறையில் நியமனம் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அரசியலமைப்பில் இருப்பதைப் போன்றே அரசியலமைப்புப் பேரவையை கொண்டுவந்துள்ளோம். அரசியலமைப்புப் பேரவையில் எந்தவொரு நபரின் பெயரையும் நான் முன்மொழியச் செல்லவில்லையென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை