புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு

85 வீத தொழிலாளர்களின் வயிற்றிலடித்த கூட்டு ஒப்பந்தம்

ஊக்குவிப்புக் கொடுப்பனவு ரூ.140 வரவுக்கான கொடுப்பனவு ரூ. 60
நிலுவைக் கொடுப்பனவுக்கும் ஆப்பு

உடன்படிக்கையில் நீக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து மீண்டும் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்குச் சகல தொழிற்சங்கங்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதால், அதில் கைச்சாத்திடவில்லை என்று தெரிவித்த அவர், முதலாளிமார் சம்மேளனம் 85வீத தொழிலாளர்களின் வயிற்றிலடித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்றாவது தொழிற்சங்கமான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இம்முறை அதில் கைச்சாத்திடவில்லை. அதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்த இராமநாதன், ஒப்பந்தம் கைச்சாத்திப்பட்ட இரண்டாண்டு காலப்பகுதிக்குள் திருத்தங்களைச் செய்த சந்தர்ப்பம் இதற்கு முன்னர் ஏற்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தற்போது முன்வைக்கப்படும் விமர்சனங்கள், குறைபாடுகள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, உடன்படிக்கையை மீளப்புதுப்பிக்க வேண்டும் என்பதே தமது சங்கத்தின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது பற்றிக் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, உடன்படிக்கையின் நகல் வரைவொன்றைச் சங்கங்களுக்கு அனுப்புவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற உடன்படிக்கை நகலில், பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டதாகவும் அதனைப் பார்த்த பின்னரே உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்று முடிவுசெய்ததாகவும் இராமநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

முக்கியமாகக் கடந்த 2018 ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட வேண்டிய புதிய கூட்டு ஒப்பந்தம், 2019 ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய ஒப்பந்தம் அடுத்த இரண்டாண்டுகளும் மூன்று மாதங்களும் நீடிக்கின்றது. இதன்படி ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் உடன்படிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. மாறாக, தொழிலாளர்களுக்கு (Ex-Gratia Payment) சன்மானக்கொடுப்பனவொன்றை வழங்குவதாகப் பிறிதொரு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தது, தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவான 140 ரூபாய், வரவுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்த 60 ரூபாய் உடன்படிக்கையில் நீக்கப்பட்டு, அந்தத் தொகையே சம்பள அதிகரிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த இராமநாதன், இது மோசமான துரோகமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அடிப்படைச் சம்பளத்துடன் முன்பு வழங்கப்பட்டு வந்த 140 ரூபாய், 60 ரூபாய் எல்லாத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை என்று பலமுறை முதலாளிமார் சம்மேளனத்திடம் சுட்டிக்காட்டியபோது, அதனை மறுத்துரைத்த சம்மேளனம், 85 வீதமான தொழிலாளர்கள் அந்த 200 ரூபாயைப் பெறுவதாகப் பதிலளித்தது. அவ்வாறென்றால், தற்போது அந்தத் தொகையே சம்பள அதிகரிப்பாக வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அஃது 85 வீத தொழிலாளர்களின் வயிற்றிலடித்தமைக்கு ஒப்பானது.

ஏனெனில், அவர்களுக்குப் புதிய ஒப்பந்தத்தால் எந்தப் பயனும் இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்த அதே 200 ரூபாய் தொடர்ந்தும் கிடைக்கும். உண்மையில் இது தொழிலாளர்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்று விசனம் தெரிவித்த இராமநாதன், தொழிலாளர்கள் தொழிலுக்கு வருவதை ஊக்குவிப்பதற்காகவே 1998 இல் வரவுக்கான ஊக்குவிப்புத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தொழிலாளர்கள் பணிக்கு வந்தாலும் ஒன்று வராவிட்டாலும் ஒன்று என்ற அலட்சியப் போக்கை முதலாளிமார் சம்மேளனம் கைக்கொண்டுள்ளது. அதேநேரம், உற்பத்தி ஊக்குவிப்புத் தொகை மறுக்கப்பட்டுள்ளமையானது தோட்டங்களை நாசமாக்கும் சதித்திட்டம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந் நிலையில், உடன்படிக்கையை மீளப்புதுப்பிக்க சகல சங்கங்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

விசு கருணாநிதி

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை