புதிய அரசியலமைப்புக்கான வரைபை தயாரித்து விவாதிப்பதே யதார்த்தம்

வரைபை தயாரிக்கும் பணிகளில் இறுக்கம்

அரசியலமைப்புக்கான வரைபொன்றைத் தயாரித்து அதனடிப்படையில் கலந்துரையாடல்களை நடத்துவதே யதார்த்தபூர்வமானதாக அமையும் என ஜே.வி.பியின் ஊடக செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பு வரைபைத் தயாரித்து அவற்றை மக்கள் முன்நிலையில் வைத்து தேர்தலுக்குச் செல்வது என்பது நடக்கக் கூடிய காரியமல்ல. பொதுத் தேர்தல் நடத்துவதற்கும், அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.  

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.  

அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவில் முன்வைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் வழிநடத்தல் குழு, அரசியலமைப்பு சபையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த அறிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளன. வழிநடத்தல் குழுவில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தாலேயே வரைபை முன்வைக்காது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இவ்வாறான சூழ்நிலையில் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டியதில்லை. அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரித்து அதன் அடிப்படையில் அடுத்த கட்டத்துக்குச் செல்வதே யதார்த்தபூர்வமானதாக இருக்கும். இதனைவிடுத்து அரசியல் கட்சிகள் தமக்கான அரசியலமைப்பு வரைபை தயாரித்து அதனை மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்து அதனடிப்படையில் தேர்தலை முகங்கொடுப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. இணக்கப்பாடொன்று ஏற்படாததால் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் முழுவதும் இறுகிப்போயுள்ளன.  

பாராளுமன்றத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளில் தற்பொழுது இல்லை. எனவே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பை முன்வைப்பதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

(மகேஸ்வரன் பிரசாத்)  

Mon, 01/14/2019 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை