இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன

ஆஸிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்:

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு பதிலாக, புதுமுக வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, லஹிரு குமார தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளானார். இதனால் மைதானத்தைவிட்டு பாதியில் வெளியேறிய அவர், இரண்டாவது இன்னிங்ஸின் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 4 அல்லது 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியதாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்திருந்தார்.

லஹிரு குமாரவுக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் வேகப்பந்து மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு வரும் சாமிக கருணாரத்ன குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார். சாமிக கருணாரத்ன 29 முதற்தர போட்டிகளில் விளையாடி 34.16 என்ற சராசரியில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ஒரு சதம் மற்றும் 7 அரைச் சதங்கள் அடங்கலாக 998 ஓட்டங்களை குவித்துள்ளார்.

சாமிக கருணாரத்ன இறுதியாக அயர்லாந்து ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 100 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியிருந்தார். அதுமாத்தரமின்றி, கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவதன் காரணமாகவே, இவருக்கு முதன் முறையாக தேசிய அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இவர், இரவு அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பார் என கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவின் இடது முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதன்படி உபாதைக்குள்ளான துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் நாடு திரும்பினர்.

இலங்கை அணியை பொறுத்தவரை, அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னர் அஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதை காரணமாக வெளியேறியிருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக நுவான் பிரதீப் உபாதை காரணமாக நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக விஷ்வ பெர்னாண்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டார். இதன்படி, அவுஸ்திரேலியா சென்றிருந்த மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் வெளியேறியுள்ள நிலையில், இலங்கை அணி லக்மால் மற்றும் கசுன் ராஜித ஆகியோரை தங்களுடைய முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1--0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி கன்பெராவில் நடைபெறவுள்ளது.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை