தெற்கு மனித நேய ரயில் கிளிநொச்சிக்கு வருகை

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு நிவாரணங்கள் கையளிப்பு

வெள்ளப் பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் தென் பகுதியிலிருந்து சென்ற ‘நிவாரண ரயில்’ நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கிளிநொச்சியை சென்றடைந்தது.

சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி, தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுகள், உடு புடவைகள், உள்ளிட்ட குழந்தைகள் உணவு, ஆடைகள் அடங்கிய பொதிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கையளிக்கப்பட்டதாக ‘சுரகிமு தும்ரிய’ அமைப்பின் அமைப்பாளரான ருவான் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து (“சுரகிமு தும்ரிய’) ‘ரயில் சேவையைப் பாதுகாப்போம்’ என்ற சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘நிவாரண ரயில்’ பயணம் வெற்றியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ருவான் பத்திரன மேலும் தெரிவிக்கையில், நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து 6.00 மணிக்கு புறப்பட்ட விசேட ரயில் நேற்று பகல் 1.00 மணியளவில் மாங்குளத்தை சென்றடைந்ததும் மாங்குளம் ரயில் நிலையத்தில் முல்லைத்தீவு மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரனிடம் இவை கையளிக்கப்பட்டன. அடுத்து 2.15 மணியளவில் கிளிநொச்சியை சென்றடைந்ததும் கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

‘சுரகிமு தும்ரிய’ அமைப்பின் உறுப்பினர்கள் சுமார் 20 பேரும், ஊடகவியலாளர்களும் இந்த ரயிலில் பயணம் செய்தனர். நிவாரணப் பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து நேற்று ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை அப்பியாசப் புத்தகங்களை ரயில் நிலைய அதிபர்கள் எடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிகழ்வுகளில் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பியும் கலந்து கொண்டார்.

(கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப் நிருபர்கள்)

Wed, 01/02/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை