புதிய யாப்பை உருவாக்க கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும்

வாய்ப்பை தவறவிட்டால் நாட்டுக்கு பேரழிவு

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சியின் பங்களிப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும். அதேநேரம், தற்பொழுது கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை இரண்டு பிரதான கட்சிகளும் தவறவிட்டால் நாட்டுக்கு பேரழிவாகவே அது அமையும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்றையதினம் நடைபெற்ற அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,

மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரேரணையொன்றை நிறைவேற்றியே அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தோம். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்பொழுது நாடு பிளவுபடப்போகிறது என பிரசாரம் செய்யும் அனைவரும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியவர்கள். அது மாத்திரமன்றி சகல தரப்பினரினதும் ஒப்புதலைப் பெற்றே வழிநடத்தல் குழு இடைக்கால அறிக்கையை தயாரித்திருந்தது. உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைத்த நிலைப்பாடுகள் என்பன அதில் உள்ளடக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளின் மாற்றுக் கருத்துக்களை உள்ளடக்க வேண்டும் என்பதாலேயே இடைக்கால அறிக்கை பத்து மாதங்கள் காலதாமதமாக வெளியிடப்பட்டது. வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் கலந்துகொண்ட சுதந்திரக் கட்சியினர் ஒரு கட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். பின்னர் அவர்களுடைய நிலைப்பாடு மாறிவிட்டது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பை தயாரிக்கும் மற்றும் அதனை நிறைவேற்றும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை செயற்படும். சுதந்திரம் அடைந்த பின்னர் முதற் தடவையாக அரசியலமைப்புச் செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சியொன்று பங்கெடுத்துள்ளது என சிலர் சபையில் சுட்டிக்காட்டினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை