ஸ்ரீலங்கன் மறுசீரமைப்பு பரிந்துரைகளுக்கு குழு நியமனம்

எரான் விக்கிரமரத்ன தலைமையில் 12 பேர்

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்குத் தேவையான கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலான குறித்த குழுவில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டி.பி. பீ. எச். திஸாபண்டார, வீ. கனகசபாபதி, எல்.எஸ்.ஐ. ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கோபல்லவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசூரி வன்னியாரச்சி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 12 பேர் அடங்கிய குறித்த குழுவின் மூலம், ஸ்ரீ லங்கன் விமான சேவையை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை கையளிப்பதற்கு அனைத்து தரப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்த பரிந்துரைகளை கருத்திற்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான எதிர்கால தீர்மானங்கள் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஸ்ரீ லங்கன் விமான சேவையை முறையான மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு தேவையான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

Mon, 01/07/2019 - 17:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை